Home மாவட்டங்கள் பெங்களூர் அமைச்சர் ராஜினாமா விவகாரம் – காங்கிரஸ் பிஜேபி போட்டி போராட்டம்

அமைச்சர் ராஜினாமா விவகாரம் – காங்கிரஸ் பிஜேபி போட்டி போராட்டம்

கர்நாடக மேல் சபையில் பிஜேபி தொடர்ந்து அமளி கூச்சல் குழப்பம் செய்து அவையை நடத்த விடாமல் தடுப்பதாக கூறி காங்கிரஸ் எம்எல்சிகள் இன்று பெங்களூரில் போராட்டம் நடத்தினர்

பெங்களூர்: ஆக. 21-
கர்நாடக மாநில திட்டமிடல் மற்றும் புள்ளியியல் துறை அமைச்சர் பி.நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகின்றன. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும்கட்சியான காங்கிரஸும் களத்தில் இறங்கியுள்ளதால், இரு தரப்பிற்கும் இடையே அரசியல் மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
அமைச்சர் நாகேந்திரா ராஜினாமாவை வலியுறுத்தி பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள (ஜே.டி.எஸ்) கட்சிகள் கடந்த 4 நாட்களாக சட்டமன்றத்தின் இரு அவைகளிலும் போராட்டம் நடத்தி வந்தன. இந்நிலையில், இன்று சட்டமன்ற வளாகத்தில் உள்ள வால்மீகி சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள், அங்கிருந்து சட்டப்பேரவை நோக்கி பிரம்மாண்ட பேரணி நடத்தினர். பாஜக மாநிலத் தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் மற்றும் சலவாதி நாராயணசாமி ஆகியோர் இந்த பேரணிக்கு தலைமை தாங்கினர்.

கர்நாடக மாநில பிஜேபி சார்பில் மாநில அரசை கண்டித்து பெங்களூரில் இன்று போராட்டம் நடத்தப்பட்டது இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாநில தலைவர் விஜயந்திரா தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் “அமைச்சர் நாகேந்திரா உடனே ராஜினாமா செய்ய வேண்டும்”, “தலித்துகளின் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு கண்டனம்” போன்ற வாசகங்கள் அடங்கிய கருப்பு நிற டி-ஷர்ட்டுகளை அணிந்திருந்தனர். இதற்குப் போட்டியாக, காங்கிரஸ் அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் கே.பி.சி.சி தலைவர் பி.கே.ஹரிபிரசாத் தலைமையில் காந்தி சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகளின் மக்கள் விரோத போக்கையும், அவையின் கண்ணியத்தை சீர்குலைக்கும் நடவடிக்கையையும் கண்டித்து அவர்கள் கரகோஷம் எழுப்பினர். கருப்பு டி-ஷர்ட் அணிந்து பேரவைக்குள் நுழைய முயன்ற ஆர்.அசோக், பி.ஒய்.விஜயேந்திரா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை, “கருப்புச் சட்டை அணிந்து உள்ளே செல்ல அனுமதி இல்லை” எனக் கூறி பாதுகாப்புப் படையினர் (மார்ஷல்கள்) தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ-க்களுக்கும் மார்ஷல்களுக்கும் இடையே கடுமையான காரசார விவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. இறுதியில் மார்ஷல்களை மீறி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரவைக்குள் அதிரடியாக நுழைந்தனர். “அமைச்சர் பி.நாகேந்திரா ராஜினாமா செய்யும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.அசோக் திட்டவட்டமாகத் தெரிவித்தார். மேலும், ஆளும்கட்சி போராட்டம் நடத்துவதை கேலி செய்த அவர், “வரலாற்றிலேயே ஆளும்கட்சி போராட்டம் நடத்தியதாக முன்னுதாரணம் இல்லை. எதிர்க்கட்சிகளின் போராட்டத்தைக் கண்டு திசைதெரியாமல் த தளிக்கும் காங்கிரஸ், தற்போது போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது” என்றார் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பி.கே.ஹரிபிரசாத் நிருபர்களிடம் பேசுகையில், “மாநிலத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அது குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அனுமதிக்காமல் அவையை முடக்குகின்றன. பாஜக தலைவர்கள் மீது கொலை, கற்பழிப்பு, ஊழல் வழக்குகள் உள்ளன. அவர்கள் எங்களுக்கு நீதி போதிக்கத் தேவையில்லை. வால்மீகி விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு (SIT) அமைச்சர் நாகேந்திராவிற்கு தூய்மைச் சான்றிதழ் வழங்கிவிட்டது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதிலடி கொடுத்தார்.