
சென்னை: ஆக. 21-
தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், 59 திமுகவின் எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்ற கட்சிகளின் உறுப்பினர்களுக்கு மட்டும் வாகனங்கள் வழங்க வேண்டும்; தேர்தல் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள பொருளாதாரத் தரவுகளுக்கு ஏற்ப எம்.எல்.ஏ.க்களுக்கு வாகனங்கள் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுன , கார் வைத்துள்ள தவெக எம்.எல்.ஏ.க்கள் கார் கேட்கப் போவதில்லை. அமைச்சருக்குக் கார், வீடு, நான்கு உதவியாளர்கள் கொடுக்கப்படுகின்றன; ஆனால் எம்.எல்.ஏ.க்களுக்கு அப்படி இல்லை. ஒரு எம்.எல்.ஏ. மூன்று லட்சம் மக்களைச் சென்று பார்க்க வேண்டிய சூழல் இருக்கிறது; அதனால்தான் கார் வழங்குகிறோம் எனத் தெரிவித்தார். இதை தொடர்ந்து அமைச்சரின் பேச்சு மீண்டும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கடன் சுமையில் இருப்பதாக முதலமைச்சர் கூறியுள்ளார்; அதனால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கார் வேண்டாம் என முடிவு எடுத்துள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். அரசின் நிதிநிலைமையைக் கருத்தில்கொண்டு அரசு சார்பில் கார் பெறுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் கூட 2, 3 வீடுகள் இருக்கிறது. பிறகு ஏன் அரசு பங்களா கேட்கிறார் என நான் கேட்க முடியுமா என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு கார் வேண்டும் என கேட்டிருந்தார். இதையடுத்து அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.
இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனங்களை தெரிவித்திருந்தனர். கார் கேட்ட ஜோதிமணி எம்எல்ஏவிடம் ஒரு கார் இருக்கிறது. அது போல் அவரது சொத்து மதிப்பு ரூ 85 லட்சம் என தேர்தல் பிரமாண பத்திரத்தில் அவர் தாக்கல் செய்திருந்ததை சமூகவலைதள பக்கத்தில் பலர் பரப்பி வருகிறார்கள். இந்த நிலையில் இன்று சட்டசபை கூடியதும் கார் விவகாரம் எதிரொலித்தது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், “கஜானாவை காலி செய்துவிட்டோம் என கூறிவிட்டு பிறகு எதற்காக எல்லா எம்எல்ஏக்களுக்கு கார் வழங்குகிறீர்கள். அரசின் நிதி நிலையை கருத்தில் கொண்டு முதல்வர் விஜய் கொடுக்கும் கார்களை திமுக எம்எல்ஏக்கள் 59 பேரும் பெற மாட்டார்கள். பொருளாதாரத்தில் நலிந்துள்ள எம்எல்ஏக்களுக்கு மட்டும் கார் கொடுக்கலாம்” என உதயநிதி தெரிவித்தார்.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குறுக்கிட்டு, கார் கொடுப்பதை உதயநிதி ஸ்டாலின் ஏதோ ஆடம்பரமாகவும் அரசியல் செய்யவும் பார்க்கிறார்கள். அது அப்படி கிடையாது. தவெக எம்எல்ஏக்களிடம் கூட கார்கள் இருக்கின்றன. எனவே கார் இருக்கும் நாங்களும் கார்களை வாங்க மாட்டோம். யாருக்கெல்லாம் இல்லையோ அவர்கள் கடிதம் கொடுத்தால் அவர்களுக்கு கொடுப்பார்கள். நிறைய சட்டசபை உறுப்பினர்கள் ஏழ்மை பின்னணியில் இருக்கிறார்கள். ஒரு அறிவிப்பு என வரும் போது அனைவருக்கும் என்றுதான் அறிவிக்க வேண்டும். அதில் யாருக்கு தேவையோ அவர்கள் வாங்கிக் கொள்ளட்டும். உதயநிதி ஸ்டாலினிடம் 2,3 பங்களாக்கள் இருக்கின்றன. எனினும் அரசு பங்களா வேண்டும் என நான் பொதுப் பணித் துறை அமைச்சர் என்பதால் அவர் என்னிடம்தான் கடிதம் கொடுத்திருந்தார்.













