Home செய்திகள் தேசிய செய்திகள் இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பதா? ராகுல் மீது உபி. முதல்வர் குற்றச்சாட்டு

இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்க நினைப்பதா? ராகுல் மீது உபி. முதல்வர் குற்றச்சாட்டு

ரேபரேலி: ஆகஸ்ட் 25-
‘’நகர்ப்புற நக்சல்கள் மூலம் இளைஞர்களின் எதிர் காலத்தை அழிக்க ராகுல் விரும்புகிறார்,’’ என, பா.ஜ.,வைச் சேர்ந்த உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டினார்.
மஹாராஷ்டிராவின் புனேவில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாணவர்களிடையே பேசிய காங்கிரசைச் சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல், ‘பெண்கள் யாருக்கும் சொந்தமானவர்கள் அல்ல; அவர்களுக்கே உரியவர்கள்.
‘வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆண்களின் கட்டுப்பாட்டில் பெண்கள் இருக்க வேண்டும் என்ற மனுஸ்மிருதியின் கருத்து வெட்கக்கேடானது’ என்றார்.
இது தொடர்பாக, உ.பி.,யின் ரேபரேலியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். மனுஸ்மிருதியை பற்றி புரிந்து கொள்ள விரும்பினால், அதர்வ வேதம், சதபத பிராமணம், மத்ஸ்ய புராணம் ஆகியவற்றை ராகுல் முதலில் படிக்க வேண்டும். அதன் மூலம் முழு விபரங்களையும் அறியலாம்.
உ.பி.,க்கு வெளியே இருக்கும் போது, மாநிலத்தை அவமதிக்கிறார்; வெளிநாடுகளுக்கு செல்லும் போது நம் நாட்டை அவமதிக்கிறார். இதையே முழு நேர வேலையாக ராகுல் செய்கிறார்.
எல்லைகளில் நம் ராணுவம் எதிரிகளை எதிர்த்து போராடும் போதெல்லாம் சான்று கேட்பது, பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மறைமுகமாக தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பது, அயோத்தியில் பகவான் ராமரின் இருப்பு குறித்து கேள்வி எழுப்புவது என, நாட்டுக்கு எதிராகவே அவர் செயல்படுகிறார்.
நகர்ப்புற நக்சல்கள் மூலம், நாட்டின் இளைஞர்களின் எதிர் காலத்தை அழிக்க அவர் விரும்புகிறார். இவ்வாறு அவர் பேசினார்.