Home மாவட்டங்கள் பெங்களூர் சைபர் குற்ற ஹாட்ஸ்பாட்டில் தமிழகம் 7வது இடம்; நிதியிழப்பு மாநிலங்களில் 4வது இடம்

சைபர் குற்ற ஹாட்ஸ்பாட்டில் தமிழகம் 7வது இடம்; நிதியிழப்பு மாநிலங்களில் 4வது இடம்

கோவை: ஆகஸ்ட் 25-
சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ‘ஹாட்ஸ்பாட்’ பட்டியலில் தமிழகம் 7வது இடத்திலும், சைபர் மோசடிகளால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் 4வது இடத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் முக்கிய திட்டங்களை விரைவுபடுத்தவும், முக்கிய பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் பிரதமர் தலைமையில் மாதந்தோறும் நடைபெறும் ‘பிரகதி’ கூட்டத்தில், கடந்த இரண்டு மாதங்களாக சைபர் குற்றங்கள் தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன் மாதம் நடந்த 52வது பிரகதி கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரிவுகளில் சைபர் குற்றமும் இடம்பெற்றது. சைபர் குற்றங்களை தடுக்கவும், புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்தார்.
இதைத்தொடர்ந்து, தேசிய அளவில் சைபர் குற்றங்கள் அதிகம் நடைபெறும் மாநிலங்களின் ஹாட்ஸ்பாட் பட்டியல் தயாரிக்கப்பட்டு, இம்மாதம் நடக்கவுள்ள பிரகதி கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதில் மேற்கு வங்கம் முதலிடத்திலும், உத்தரபிரதேசம் இரண்டாவது, மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளன. தமிழகம் ஏழாம் இடத்தில் உள்ளது.
அதேபோல், சைபர் குற்றங்களால் அதிகளவில் பணத்தை இழக்கும் மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாவது இடத்திலும், உத்தரபிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் மட்டும் இந்தாண்டு ஜன., முதல் ஜூலை 31ம் தேதி வரை 88,385 சைபர் குற்ற புகார்கள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து தமிழக சைபர் கிரைம் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில் ‘’கடந்த இரண்டு மாதங்களாக பிரகதி கூட்டத்தில் சைபர் குற்றங்கள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
தேசிய அளவில் சைபர் குற்றங்களால் அதிக நிதியிழப்பு ஏற்படும் மாநிலங்களில் தமிழகம் நான்காம் இடத்திலும், தமிழக அளவில் கோவை முதல் இடத்திலும் உள்ளன. 53வது கூட்டத்தில், சைபர் குற்றங்கள் குறித்து சிறப்பு கவனம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,’’ என்றார்.