
சென்னை: ஆக. 24:
தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் முதலமைச்சர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்தார்
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றது வருகிறது. வார இறுதி விடுமுறைக்கு பின்னர் இன்று (ஆக.24 – திங்கட்கிழமை) கூடிய அவையின் தொடக்க நிகழ்வாக, கடந்த வாரம் காலமான பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்னர் முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது.
கடந்த 4 மாதங்களாக வளைகுடாவில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனால் மக்களின் செலவு கூடியுள்ளது. அதைக் கருத்தில் கொண்டு மக்களின் நிதிச்சுமையை குறைக்கும் வகையிலும், மக்கள் நலனை பாதுக்காகவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும், எரிவாயு சிலிண்டருக்கான செலவழிக்கப்படும் தொகையினை வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக ஆண்டுக்கு மூன்று சிலிண்டர்கள் விலையின்றி வழங்கப்படும். இந்தத் திட்டம் பொங்கல் திருநாள் முதல் செயல்பாட்டுக்கு வரும். எரிவாயு சிலிண்டருக்கு விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டம் மூலம் 1.30 கோடி குடும்பங்கள் பயனடைவார்கள்” என்று முதல்வர் விஜய் தெரிவித்தார்.
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டம் ‘வெற்றிப் பயணம்’ என்ற பெயரில் காந்தியடிகள் பிறந்த நாளான அக்.2ம் தேதி முதல் விரிவாக்கம் செய்யப்படும். முதற்கட்டமாக மாநகரம், நகரப் பகுதிகளில் இயங்கும் Express, LSS, டீலக்ஸ் (Deluxe) அரசுப் பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். மாவட்டங்களுக்கிடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் (Mofussil) மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரணக் கட்டண பேருந்துகளிலும், மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ளவிரும்பும் பயண எண்ணிக்கையிலோ கட்டுப்பாடுகள் இல்லை திருநங்கைகளும் இலவசமாக பஸ் பயணம் செய்யலாம் இவ்வாறு சட்டசபையில் முதலமைச்சர் விஜய் அறிவிப்பு செய்தார்.













