Home செய்திகள் உலக செய்திகள் ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை; எங்களுக்கு அவசரமும் இல்லை என்கிறார் டிரம்ப்

ஈரானுக்கு காலக்கெடு எதுவும் இல்லை; எங்களுக்கு அவசரமும் இல்லை என்கிறார் டிரம்ப்

வாஷிங்டன்: ஆக. 27-
போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வருவதற்கு ஈரானுக்கு எந்தக் காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் துவங்கிய நாளையுடன் 6 மாதங்கள் நிறைவடைய இருக்கிறது. இருப்பினும், இருநாடுகளிடையே போர் நிறுத்தம் உறுதி செய்யப்படவில்லை. இருநாடுகளிடையே ஒப்பந்தத்தை ஏற்படுத்த கத்தார் மற்றும் பாகிஸ்தான் மத்தியஸ்தர்களாக செயல்பட்டு வருகின்றன. போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவும், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை ஏற்படுத்தவும், கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்யும் விவகாரத்தில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது; இந்தப் போரில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை அடைந்து விட்டோம். அவர்கள் (ஈரான்) கடும் பணவீக்கத்தை சந்தித்து வருகின்றனர். அவர்களின் பொருளாதாரம் நிலைகுலைந்து போய்விட்டது. அவர்கள் மக்களை மிக மோசமாக நடத்துகிறார்கள். போராடும் மக்களையும் கொன்று குவித்து வருகின்றனர். ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த எனக்கு எந்த அவசரமும் இல்லை. அவர்களுக்கு எந்த காலக்கெடுவும் விதிக்கப்படவில்லை. அவர்கள் எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை, இவ்வாறு அவர் கூறினார்