Home செய்திகள் தேசிய செய்திகள் நேபாள பெருவெள்ள பாதிப்பின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

நேபாள பெருவெள்ள பாதிப்பின் செயற்கைக்கோள் படங்கள் வெளியீடு

காத்மண்டு: ஆக. 27-
நேபாளத்தில் கோரதாண்டவம் ஆடிய பெருவெள்ளம் தொடர்பான செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன.
மிகப்பெரிய பனிப்பாறை உருகியதால் நேபாளத்தில் உள்ள கோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், சுமார் 100 பேர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த இந்திய சுற்றுலாப் பயணிகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு மாயமாகினர். இந்த வெள்ளப்பெருக்கினால் வீடுகள், சாலைகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும், சேதத்தின் முழுமையான மதிப்பீடும் இன்னும் கணக்கிடப்படவில்லை. மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்தியா சார்பில் மனிதாபிமான உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் ஏற்படுவதற்கு முன்பும், பின்பும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. பிளானட் லேப்ஸ் எடுத்த செயற்கைக்கோள் படங்களை ஒப்பிட்டுப் பார்க்கையில், திடீர் வெள்ளத்திற்கு முன்னும் பின்னும் நேபாளத்தின் பல பகுதிகளில் பெரும் பேரழிவு ஏற்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மனகமனா கிராமத்திற்கு அருகே உள்ள பள்ளத்தாக்குகள் மற்றும் கட்கா பாஞ்சியாங் கிராமம் ஆகிய இடங்களில் வெள்ளப்பாதிப்பு முன்பாகவும், அதன் பிறகும் எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்கள் வைரலாகி வருகின்றன.