
புதுடில்லி: ஆக. 27-
‘நீட்’ வினாத்தாள் கசிவை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் டில்லியில் நடத்திய போராட்டத்துக்கு பின், முக்கிய அரசியல் தலைவர்களும், கட்சிகளும் இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும், ‘இன்ஸ்டாகிராம்’ சமூக வலைதளத்தில் தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளனர் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வின் வினாத்தாள்
கசிந்த விவகாரத்தை கையில் எடுத்து ஜூலை 20ல் பார்லிமென்ட் நோக்கி கரப்பான்பூச்சி கட்சியினர் பேரணி நடத்தினர்.
இதற்காக, ‘இன்ஸ்டா கிராம்’ சமூக ஊடகம் வாயிலாக பெரிய அளவில் பிரசாரம் நடந்தது. போராட்டம் தொடர்பாக, ‘ரீல்ஸ்’ எனப்படும், சில வினாடி கள் மட்டுமே ஓடும் வீடியோக்கள் அதிகம் பரப்பப்பட்டன.
வரவேற்பு: இந்த போராட்டத்தை தொடர்ந்து, அரசியல் தலைவர்கள் மற்றும் கட்சிகளின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக சமூக வலைதள தரவு ஆய்வு நிறுவனமான, ‘டேட்டா பீயிங்ஸ்’ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு தகவலில் கூறியுள்ளதாவது: ஜூலை 20க்கு பின், பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் மற்றும் காங்கிரஸ், பா.ஜ., கட்சிகளின் இன்ஸ்டாகிராம் பதிவுகளுக்கான சராசரி வரவேற்பு அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் பதிவுகளுக்கான வரவேற்பு, ஜூலை 20க்கு முன் இருந்ததை விட நான்கு மடங்கு அதிகரித்து, 46 லட்சத்தை கடந்துள்ளது.
ராகுலின் பதிவுகளுக்கான வரவேற்பு, மூன்று மடங்கு அதிகரித்து, 4 லட்சத்துக்கும் மேல் சென்றுள்ளது. காங்கிரஸ், பா.ஜ., ஆகிய கட்சிகளின் கணக்குகளுக்கான வரவேற்பு குறைவாகவே உயர்ந்துள்ளது.
அதிகரிப்பு: காங்கிரஸ் பதிவுகளுக் கான சராசரி வரவேற்பு 50,000 இருந்து 72,000 ஆகவும், பா.ஜ., பதிவுகளுக்கான வரவேற்பு 25,000 இருந்து 34,000 ஆகவும் அதிகரித்து உள்ளது. கட்சிகளின் பெயர்களை முன்னிறுத்தும் பதிவுகளை விட, தனிப் பட்ட தலைவர்களை முன்னிறுத்தும் அரசியல் பதிவுகளுக்கே அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.













