
சென்னை: ஆக. 27:
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வதற்காகச் சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாகப் பொறுப்பு அமைச்சர்கள், கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை, கடலூர் உட்பட 5 மாவட்டங்களில் நீர்நிலைகளைத் தூர் வார ரூ.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது:
வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும்,
அலுவலர்களை ஒருங்கிணைக்கவும், சென்னை மாநகராட்சியில் மண்டலவாரியாக 7 பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி அமைச்சர்கள் ரமேஷ் (திருவொற்றியூர், மணலி), லோகேஷ் தமிழ்ச்செல்வன் (மாதவரம், தண்டையார்பேட்டை), அருண்ராஜ் (ராயபுரம், திருவிக நகர்), விஜய் பாலாஜி (அம்பத்தூர், அண்ணா நகர்,
தேனாம்பேட்டை), விஜய் தமிழன் பார்த்திபன் (ஆலந்தூர், அடையாறு), பிரபு (கோடம்பாக்கம், வளசரவாக்கம்), விக்னேஷ் (பெருங்குடி, சோழிங்கநல்லூர்) ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களில் முகாமிட்டு நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்துவார்கள். மேலும், சென்னை மாவட்ட பொறுப்பு அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இந்தப் பணிகளை ஒருங்கிணைப்பார்.
இதேபோல், அமைச்சர்களுடன் இணைந்து நிர்வாக ரீதியான
நடவடிக்கைகளை மேற்கொள்ள 15 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கண்காணிப்பு அலுவலர்கள், பருவ மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கும் தாழ்வான பகுதிகளைக் கண்டறிதல், நிவாரண முகாம்களைத் தயார் நிலையில் வைத்தல், ஜேசிபி இயந்திரங்கள்,
மோட்டார்கள் மற்றும் படகுகளைத் தயார் செய்தல், மருத்துவ முகாம்களை அமைத்தல்,
போக்குவரத்து நெரிசலைச் சரி செய்தல் மற்றும் தடையற்ற தகவல் தொடர்பை உறுதி செய்தல் போன்ற பணிகளில் ஈடுபடுவார்கள். இவ்வாறு அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது.













