
புதுடெல்லி, செப். 1- அமெரிக்காவில் இந்திய தேசியக் கொடியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பு தனது நூற்றாண்டு விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த சனிக்கிழமை உரையாற்றினார். அப்போது, மேடிசன் ஸ்கொயர் கார்டனுக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தேசியக் கொடியை காலில் மிதித்தும் கிழித்தும் அவமதித்தனர். இதுதொடர்பாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதில், “அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பதில் தவறில்லை. ஆனால், நாட்டை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆர்எஸ்எஸ், பாஜக அல்லது அரசை விமர்சிக்க முழு சுதந்திரம் உள்ளது. ஆனால், நமது நாட்டை அவமதிக்கக் கூடாது. இதை கவனமாகக் கேட்டுக் கொள்ளுங்கள். எனது தேசியக் கொடியையும், எனது நாட்டையும் அவமதிக்காதீர்கள். மீறினால் அதற்காக நீங்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறியுள்ளார். இதனுடன், தேசியக் கொடியை காலில் கட்டிக்கொண்டு ஒருவர் தனது காலை அசைக்கும் காட்சிகள் அடங்கிய காணொலியையும் அவர் பகிர்ந்துள்ளார்.













