Home செய்திகள் தேசிய செய்திகள் அமெரிக்கர், உக்ரைனியர்கள் மீது குற்றச்சாட்டு

அமெரிக்கர், உக்ரைனியர்கள் மீது குற்றச்சாட்டு

புதுடெல்லி: செப்டம்பர் 5-
இந்தியாவின் மிசோரம் எல்லைப் பகுதியில், அமெரிக்கர் மேத்யூ ஆரோன் வாண்டைக் மற்றும் உக்ரைனைச் சேர்ந்த ஆறு பேர் ரகசியமாக முகாமிட்டு, அங்கிருந்து மியான்‌மருக்குள் நுழைந்தனர். அங்கு கிளர்ச்சி குழுக்களுக்கு ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியதுடன், ஆயுதப் பயிற்சியையும் வழங்கினர்.
கடந்த மார்ச் மாதத்தில், மிசோரத்தில் மேத்யூ ஆரோன் மற்றும் ஆறு உக்ரைனியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, டெல்லி நீதிமன்றத்தில் என்ஐஏ அண்மையில் மனு தாக்கல் செய்தது.
அந்த மனுவில், “பிப்ரவரி 20-ஆம் தேதி, மியான்‌மரின் மியிட்கினாவில் இருந்து மாண்டலே நகருக்கு சென்ற பயணிகள் விமானத்தில், இரு மர்ம ட்ரோன் தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு, மேத்யூ ஆரோன் மற்றும் ஆறு உக்ரைனியர்களுக்கும் தொடர்பு உண்டு. அவர்கள் ஐரோப்பாவில் இருந்து சட்டவிரோதமாக மியான்‌மருக்கு ட்ரோன்களை கடத்திச் சென்றனர்,” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவுக்கு எதிராக செயல்படும் சில தீவிரவாத குழுக்களுக்கு இவர்கள் பயிற்சி அளித்ததாகவும் தெரியவந்துள்ளது. இதற்காக, அமெரிக்கர் மேத்யூ ஆரோன் மற்றும் உக்ரைனியர் விக்டரிடம் விசாரணை நடத்த தேவையான அனுமதி நீதிமன்றத்திடம் கோரப்பட்டது.
இந்த மனுவைப் பரிசீலித்த சிறப்பு நீதிபதி பிரசாந்த் சர்மா, மேத்யூ ஆரோன் மற்றும் விக்டரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.