
குவைத், செப். 5- குவைத்தில் அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளான தமிழகப் பெண் வனிதா (35) மீட்கப்பட்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இவர், குடும்ப வறுமை காரணமாக வீட்டு பணிப்பெண் வேலைக்காக ஏஜென்ட் ஒருவரின் மூலம் குவைத் சென்றார். அங்கு, சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டு, இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் சித்ரவதைக்கு ஆளானதாக வீடியோ மூலம் வனிதா புகார் அளித்தார். “என் பெயர் வனிதா. கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவள். இங்கு மூன்று மாதங்கள் ஆகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் என்னை மீட்டு, தாய்நாடு திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்” என அவர் கேட்டுக் கொண்டார். இந்த வீடியோ வைரலானது. இதையடுத்து, வனிதாவின் தாய் வெண்ணிலா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். ஏஜென்ட் தனது மகளை ஏமாற்றிவிட்டதாகவும், அவரை உயிருடன் மீட்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை மத்திய வெளியுறவுத்துறையுடன் இணைந்து வனிதாவை பாதுகாப்பாக மீட்க முயற்சிகளை தீவிரப்படுத்தியது. வனிதாவின் வீடியோ குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் கவனத்திற்கு சென்றது. தூதரக அதிகாரிகள் வனிதாவின் இருப்பிடத்தை கண்டறிந்து அவரை மீட்டனர். தற்போது அவர் இந்திய தூதரகத்தில் பாதுகாப்பாக உள்ளார்.















