
புதுடெல்லி: செப்.5-
கடந்த ஆகஸ்ட் 4-ஆம் தேதி தாய்லாந்தின் புகேட் நகரிலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் 137 பயணிகள் மற்றும் 8 ஊழியர்கள் பயணம் செய்தனர். விமானம் நடுவானில் பறந்தபோது திடீரென 300 அடிக்கு கீழே இறங்கியது. அப்போது விமானம் நிலை தடுமாறி குலுங்கியது. இதனால் 13 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் காயம் அடைந்தனர். இதில் 4 பேருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, விமான விபத்து விசாரணைக் குழு (ஏஏஐபி) விசாரணை நடத்தி, விமானிகளின் சிறுநீர் மற்றும் ரத்த மாதிரிகளை ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பியது. பரிசோதனையில், விமானி சுதீப் வசிஷ்டா போதைப் பொருளை உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த தகவலை அடுத்து, டாடா குழுமத்துக்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “புகேட் – டெல்லி விமானத்தை இயக்கிய விமானி போதைப் பொருளை உட்கொண்டிருப்பது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதனால் அவர் பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்படுகிறார். பயணிகளின் பாதுகாப்பில் எவ்வித சமரசத்துக்கும் இடமில்லை” என்று தெரிவித்துள்ளது.













