
புதுடெல்லி, செப். 6:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) தனியார் பங்கேற்பு மற்றும் தனியார்மயமாக்கல் வேகம் அடைந்து வரும் நிலையில், இங்கு பணியாற்றும் ஊழியர்களிடையே தங்களின் எதிர்காலம் குறித்து கடும் பீதியும் நிச்சயமற்ற தன்மையும் ஏற்பட்டுள்ளது.
இஸ்ரோவின் முக்கிய மையங்களின் ஊழியர் சங்கங்கள் ஒன்றாக இணைந்து, இஸ்ரோ தலைவர் மற்றும் விண்வெளித் துறைச் செயலாளருமான டாக்டர் வி. நாராயணனுக்கு 5 பக்கங்கள் கொண்ட நீண்ட கடிதம் ஒன்றை எழுதியுள்ளன. அதில், நிறுவனத்தின் எதிர்காலப் பங்கு மற்றும் ஊழியர்களின் உரிமைகள் குறித்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
சமீபத்தில் ஜி.எஸ்.எல்.வி. எஃப்-17/இ.ஓ.எஸ்-05 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிரடி மாற்றம் நடந்துள்ளது. வி.எஸ்.எஸ்.சி., எஸ்.டி.எஸ்.சி., யு.ஆர்.எஸ்.சி., எல்.பி.எஸ்.சி., எஸ்.ஏ.சி., என்.ஆர்.எஸ்.சி. மற்றும் ஐ.பி.ஆர்.சி. உள்ளிட்ட முக்கிய மையங்களின் 9 பிரதிநிதித்துவ சங்கங்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்தச் சங்கங்கள் இஸ்ரோவின் மொத்தமுள்ள 18,100 ஊழியர்களில் சுமார் 5,000 ஊழியர்களைப் (27 சதவீதம்) பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
ஊழியர்களின் பீதிக்கு முக்கிய காரணங்கள் என்ன?
இன்ஸ்பேஸ் தலைவர் பவன் கோயங்கா சமீபத்தில் பேசும்போது, “எதிர்காலத்தில் இஸ்ரோ எந்த ராக்கெட்டுகளையும் சொந்தமாக தயாரிக்காது; இந்த வேலையை தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் மேற்கொள்ளும்” என்று கூறியிருந்தார். இந்த அறிவிப்பு ஊழியர்களின் அச்சத்தை இரட்டிப்பாக்கியுள்ளது.
சிறிய செயற்கைக்கோள் ஏவூர் தொழில்நுட்பத்தை எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு வழங்குவது, நாட்டின் மிகப்பெரிய ஏவூர்தியான எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. தொழில்நுட்பங்களை தனியாருக்கு வழங்க டெண்டர் கோரியிருப்பது ஊழியர்களின் அதிருப்திக்கு காரணமாக அமைந்துள்ளது.
அன்றாட மற்றும் வழக்கமான செயற்கைக்கோள் தயாரிப்பை தனியாரிடம் ஒப்படைப்பது மற்றும் தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் கட்டப்பட்டு வரும் புதிய விண்வெளி ஏவுதள வளாகத்தின் உள்கட்டமைப்புகளை தனியார் நிறுவனங்களுக்கு திறந்து விடுவதாக வரும் செய்திகள் கவலையை அதிகரித்துள்ளன.
ஊழியர்களின் முக்கிய கவலைகள் மற்றும் கேள்விகள்:
ராக்கெட் கட்டுமானம் என்பது வெறும் பாகங்களை ஒன்று சேர்ப்பது மட்டுமல்ல. பல தசாப்தங்களாக உழைத்து பெற்ற தொழில்நுட்பத் திறன், பாதுகாப்பு விதிகள் மற்றும் அனுபவம் நிறுவனத்தை விட்டு வெளியேறும் ஆபத்து உள்ளது.
உற்பத்தி பணிகள் வெளிநபர்களுக்குச் சென்றால், இஸ்ரோவுக்குள் வேலை அளவு குறையும். இதனால் ஊழியர்களின் பதவி உயர்வு, திறன்பாட்டின் வளர்ச்சி மற்றும் புதிய பணி நியமனங்கள் முற்றிலும் முடங்கும்.
பொதுப் பணத்தின் தொழில்நுட்பம் மற்றும் வேலை பாதுகாப்பு:
பொதுமக்களின் வரிப் பணத்தில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை தனியார் ஒப்பந்ததாரர்கள் பயன்படுத்தி வேலை செய்யும்போது, இஸ்ரோவின் தற்போதைய ஊழியர்கள் உபரியாக மாறக்கூடிய அல்லது வேலையற்றவர்களாகும் அபாயம் உள்ளது.
தற்போது இஸ்ரோவில் அனுமதிக்கப்பட்ட 18,142 பணியிடங்களில் 15,529 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றி வரும் நிலையில், 2,613 பணியிடங்கள் (14.4 சதவீதம்) காலியாக உள்ளன. தனியார்மயமாக்கல் அதிகரித்தால் குரூப் ‘ஏ’, ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவுகளுக்கான புதிய பணி நியமனங்கள் பொதுத்துறையை எதிர்நோக்கும் இளைஞர்களுக்கு கிடைக்காமல் போய்விடும். முக்கிய ஏவூர்திகளின் மேம்பாடு, சோதனை மற்றும் செயல்பாடுகளை அரசு அமைப்பின் கீழ் வைத்திருப்பது நாட்டின் மூலோபாய பாதுகாப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் தரத்தின் அடிப்படையில் மிகவும் அவசியமானது என்று ஊழியர்கள் வாதிடுகின்றனர்
தனியார் துறையின் பங்கேற்பிற்கோ அல்லது என்.எஸ்.ஐ.எல். மூலம் நடக்கும் வர்த்தகமயமாக்கலுக்கோ தாங்கள் எதிரிகள் அல்ல என்பதை சங்கங்கள் தெளிவுபடுத்தியுள்ளன. “தனியார் பங்கேற்பை ஊக்குவிப்பது” மற்றும் “இஸ்ரோவின் சொந்த தயாரிப்பு திறனை படிப்படியாக அழிப்பது” ஆகிய இரண்டிற்கும் இடையே தெளிவான கோடு கிழிக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாகும்.
விண்வெளித் துறை பின்வரும் விஷயங்கள் குறித்து அதிகாரப்பூர்வ எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் சங்கங்களுடன் திறந்த இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டும் என்று கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது:
- செயற்கைக்கோள்கள் தயாரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு பராமரிப்பில் இஸ்ரோவின் எதிர்காலப் பங்கு என்ன?
- எதிர்கால ஊழியர் திட்டம் மற்றும் பணி நியமனக் கொள்கை எப்படி இருக்கும்?
- இஸ்ரோ வெறும் ஆராய்ச்சி நிறுவனமாக மட்டுமே செயல்படுமா அல்லது உண்மையான விண்வெளி அமைப்புகளை உருவாக்கும் நிறுவனமாகவும் தொடருமா என்பதற்கு எழுத்துப்பூர்வ விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்திய விண்வெளி கொள்கை 2023 கூறுவது என்ன?
அரசுசாரா நிறுவனங்கள் செயற்கைக்கோள்களின் வடிவமைப்பு, தயாரிப்பு, ஏவூர்தி (ராக்கெட்) மேம்பாடு மற்றும் ஏவுதளங்களை சுயாதீனமாக நிறுவி பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரோ இனி அன்றாட வழக்கமான ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாரிப்பில் இருந்து படிப்படியாக விலகி, மேம்பட்ட ஆராய்ச்சி, வளர்ச்சி, சந்திரயான்/ககன்யான் போன்ற முக்கிய தேடல்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளுக்கு முன்னுரிமை அளிக்கும்.
இஸ்ரோ உருவாக்கிய முதிர்ச்சியடைந்த தொழில்நுட்பங்கள் மற்றும் ஏவுதல் சேவைகளை வர்த்தகமயமாக்கும் பொறுப்பை ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ (NSIL) மேலாண்மை செய்யும். ‘இன்ஸ்பேஸ்’ (IN-SPACe) அமைப்பின் பங்கு மற்றும் பொறுப்புகள் என்பது விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் சுயாட்சி மற்றும் ஒற்றைச் சாளர ஒழுங்குமுறை அமைப்பாகும்.
தனியார் நிறுவனங்கள் விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ள, செயற்கைக்கோள்களை சுற்றுப்பாதையில் ஏவ மற்றும் தகவல் தொடர்பு சேவைகளை வழங்க தேவையான அனைத்து அனுமதிகளையும் இன்ஸ்பேஸ் வழங்குகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு இஸ்ரோவின் ஏவுதளங்கள், சோதனை வசதிகள் மற்றும் தொழில்நுட்பத் தரவுகளைப் பயன்படுத்திக் கொள்ள இன்ஸ்பேஸ் பாலமாகச் செயல்படுகிறது.
தொழில்நுட்ப மாற்றத்தை எளிதாக்கி, இஸ்ரோ உருவாக்கிய தொழில்நுட்பங்களை தனியார் துறைக்கு மாற்றும் பணியை துரிதப்படுத்துகிறது. விண்வெளி கழிவு மேலாண்மை, செயற்கைக்கோள்களின் பாதுகாப்பான இயக்கம் மற்றும் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்கும் முக்கிய விதிகளையும் இது கொண்டுள்ளது.













