Home செய்திகள் தேசிய செய்திகள் இசைக்கலைஞர் கொலை: வடகிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பில்லை: ராகுல்

இசைக்கலைஞர் கொலை: வடகிழக்கு மாநிலத்தவருக்கு பாதுகாப்பில்லை: ராகுல்

டெல்லி: செப்.9
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் சோங்தாம் விக்ரம் சிங் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதை ராகுல் காந்தி கண்டித்துள்ளார். வடகிழக்கு மாநில மக்களுக்கு டெல்லியில் பாதுகாப்பு இல்லாத நிலை உருவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
54 வயதான சோங்தாம் விக்ரம் சிங் டெல்லி ஆசிரமம் பகுதி கிலோக்ரி கிராமத்தில் வசித்துவந்தார். அவரது வீட்டின் முன் உணவக ஊழியர்கள் மற்றும் டெலிவரி பாய்கள் எழுப்பிய சத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் கொல்லப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். “சொந்த நாட்டின் தலைநகரில், தனது வீட்டின் வாசலிலேயே ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது கேள்விக்குறியாக உள்ளது. வடகிழக்கு மாநில மக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் சட்டவிரோத செயல்களை தடுக்க உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் டெல்லி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். சம்பவம் குறித்து விரைவான விசாரணை நடத்தி, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
செப்டம்பர் 7 அன்று விக்ரம் சிங் தாக்கப்பட்டதாக சன்லைட் காலனி காவல் நிலையத்தில் தகவல் கிடைத்தது. முதற்கட்ட விசாரணையில் சத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் தாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுவர்கள் உட்பட குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.