
வாஷிங்டன்: செப். 11- அமெரிக்காவில் எச்1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு தங்குவதற்கான 60 நாள் சலுகைக் காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாகப் பதவியேற்ற டொனால்டு டிரம்ப், அந்நாட்டவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கில், எச்-1 பி விசா நடைமுறைகளில் கடுமையான மாற்றங்களை மேற்கொண்டார். அந்த விசா பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தினார். இதையடுத்து, எச்-1 பி விசாவுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனினும், விசா நடைமுறையில் பல்வேறு மாற்றங்களை அதிபர் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.அந்தவகையில், எச்1 பி விசா வைத்திருப்பவர்கள் வேலை இழந்த பிறகு அமெரிக்காவில் தங்குவதற்கான 60 நாள் சலுகைக் காலத்தை முற்றிலுமாக ரத்து செய்ய நிர்வாகம் முன்மொழிந்துள்ளது. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை இதற்கான புதிய விதிமுறைகளை அறிவிப்பாக வெளியிட்டுள்ளது. அதன்படி, எச்1 பி விசா மற்றும் சில தற்காலிக விசாக்களைக் கொண்ட வெளிநாட்டு ஊழியர்கள் வேலை இழந்த அடுத்த நாளே அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், சட்டப்பூர்வமாகத் தங்குவதற்கான மாற்று வழிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
வேலை வாய்ப்புகள் அமெரிக்க குடிமக்களுக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கிலும், சட்டப்பூர்வ குடியேற்றங்களை முறைப்படுத்தவும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக டிரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது..
எச்1 பி விசா மூலம் அதிகம் பயனடைபவர்கள் இந்தியர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விசாக்களில், கடந்தாண்டு 70 சதவீத விசாக்களை இந்திய வல்லுநர்கள் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ள இந்த மாற்றம் நடைமுறைக்கு இந்த மாற்றம் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என வட்டாரங்கள் கூறுகின்றன. அமெரிக்க தொழில்நுட்ப சேவைத் துறைகளில் பாதிக்கப்படுவர்.













