
சென்னை: செப். 12 –
சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரைகளில் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க முடியாது என்றும், அந்த சிலைகளை வேறு இடங்களுக்கு அனுப்ப வேண்டும் என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதால் மாசு ஏற்படுகிறது. எனவே, அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் கடந்த 2023-ம் ஆண்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, தீர்ப்பாய அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் பிரசாந்த் கார்கவாஹ் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது 38 மாவட்ட ஆட்சியர்கள், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சார்பில் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.அந்த அறிக்கைகளில், ‘பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகள் விற்பனையைத் தடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் காசிமேடு, திருவொற்றியூர், எண்ணூர், பட்டினப்பாக்கம், நீலாங்கரை ஆகிய கடற்கரைகள் விநாயகர் சிலைகளை கரைப்பதற்கான இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் ஆமைகள் இனப்பெருக்கம் நடைபெறுகிறது. மேலும், இப்பகுதிகள் கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்-1 பகுதியாக இருப்பதால், அங்கு சிலைகளை கரைக்க அனுமதிக்கக் கூடாது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.அப்போது குறுக்கிட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பட்டினப்பாக்கம், நீலாங்கரை பகுதிகளுக்குச் செல்லும் சிலைகளை மற்ற பகுதிகளுக்கு ஏன் மாற்றிவிடக் கூடாது எனக் கேள்வி எழுப்பினர்.
இதற்கு தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், “மற்ற பகுதிகளுக்கு மாற்றுவதைப் பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு, கூட்ட நெரிசல், மதரீதியாக பதற்றமான பகுதிகள் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.














