
அமராவதி: செப். 12
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் அரசு அதிகாரிகளைக் கடுமையாகச் சாடினார். அமராவதியில் 8-வது மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு, முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்றது. அதன் 2-வது நாளாக நேற்று நடைபெற்ற மாநாட்டில் அவர் பேசியதாவது:மக்களின் பிரச்சினைகள் மற்றும் அவை தொடர்பாக நிலுவையில் உள்ள கோப்புகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும் இந்த வேளையில், சில துறைகளைச் சேர்ந்த தலைமை அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு வராமல் இருப்பது ஆச்சரியமாக உள்ளது.
அவர்களுக்கு என்ன தைரியம்? அவர்கள் குறித்து சம்பந்தப்பட்ட செயலாளர்கள் காரணங்களை விளக்கி எனக்கு பதில் அளிக்க வேண்டும்.
சில அதிகாரிகள் செல்போன்களைப் பார்ப்பதற்குச் செலவிடும் நேரத்தைக்கூட கோப்புகளைப் பார்ப்பதற்குச் செலவிடுவதில்லை. செல்போன்கள் இல்லாமல் சில மணி நேரம்கூட இருக்க முடியாத நிலைக்கு நீங்கள் சென்றுவிட்டீர்கள். ஒவ்வொரு துறையிலும் பல நாட்களாகக் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன.
கோப்புகள் எதனால் தேங்குகின்றன என்பது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.
இதேபோல், அமைச்சர்களில் ராம்பிரசாத் ரெட்டி, கொல்லா ரவீந்திரா, கேஷவ் ஆகியோர் கோப்புகளைப் பரிசீலிக்க அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. அமைச்சர்கள் கோப்புகளை விரைந்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.நான்கூட கோப்புகளைப் பார்ப்பதற்கு அதிகபட்சம் 4 நாட்கள் வரை மட்டுமே எடுத்துக்கொள்கிறேன். அனைத்து அமைச்சர்களும் கோப்புகளை உடனுக்குடன் பார்த்து அனுப்ப வேண்டும். கோப்புகள் மேஜைகளை எவ்வளவு விரைவாகக் கடக்கின்றனவோ, அவ்வளவு விரைவாக ஆட்சியும் நடைபெறும். இல்லையென்றால் ஆமை வேகத்தில்தான் இந்த அரசு செயல்படும். இவ்வாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசினார்.















