
டாக்கா: செப். 12 –
வங்கதேசத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்து மதகுரு சின்மயி கிருஷ்ண தாஸுக்கு, அவரது தாயார் சந்தியா ராணி தாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச சம்மிலித சனாதனி ஜாகரன் ஜோத் அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ள சின்மயி கிருஷ்ண தாஸ், 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், சின்மயி கிருஷ்ண தாஸின் தாயார் சந்தியா ராணி தார் (71), உடல்நலக் குறைவு காரணமாக ஹட்காசாரி மருத்துவமனையில் உயிரிழந்தார். தாயார் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்க சின்மயி கிருஷ்ண தாஸுக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
சிட்டகாங் மாவட்ட ஆட்சியர் முஹம்மது ஜாஹிதுல் இஸ்லாம் மியா, இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக சின்மயி கிருஷ்ண தாஸுக்கு 5 மணி நேரம் மட்டும் பரோல் வழங்கி உத்தரவிட்டதாக ‘தி டெய்லி ஸ்டார்’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இதையடுத்து, சின்மயி கிருஷ்ண தாஸ் சிறையிலிருந்து தற்காலிகமாக வெளியே வந்தார். பின்னர் சிட்டகாங் நகரில் உள்ள புண்டரீக் தாம் கோயிலுக்குச் சென்றார்.
அங்கு அமைந்துள்ள ராதா-கிருஷ்ணர் விக்ரகத்தின் பாதங்களைத் தொட்டு, கண்ணீர் மல்க வணங்கினார்.சிறையில் இருந்த நிலையில், தாயாரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க சின்மயி கிருஷ்ண தாஸுக்கு குறுகிய காலமான 5 மணி நேர பரோல் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.















