
சென்னை: செப். 13-
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளுக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் கமிஷன் அறிவித்துள்ள நிலையில், அந்த அறிவிப்பை நிறுத்த வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதையடுத்து, அந்த தொகுதிகளும், இரு தொகுதிகளில் வெற்றி பெற்றதால் முதல்வர் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கு தொகுதியும் சேர்த்து மொத்தம் ஏழு தொகுதிகள் காலியாக உள்ளன.எனவே, அந்த ஐந்து தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால், மீதமுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தல் அறிவித்துள்ளது.வழக்கறிஞர் சுதன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அரசியல் காரணங்களுக்காக மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்ததால், மக்கள் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இதுபோன்ற ராஜினாமாக்களால் ஏற்படும் தேர்தல் செலவுகளுக்கு சம்பந்தப்பட்டவர்களையே பொறுப்பாக்கும் வகையில் நடைமுறை உருவாக்க வேண்டும்.தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் வகையில் சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும். இந்த வழக்கு முடிவடையும் வரை, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.















