
வாஷிங்டன்: செப்.13-
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், ஹோட்டல் அருகே 38 வயதான இந்திய வம்சாவளி பெண்ணை 22 வயது வாலிபர் சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளதாவது: கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஷாலினி தாக்கூர், 38, என்பவரை இந்தியாவைச் சேர்ந்த 22 வயது வாலிபர் ரோஹித் பல மாதங்களாகப் பின்தொடர்ந்து வந்துள்ளார். கடந்த செப்டம்பர் 8-ம் தேதி, சாக்ரமெண்டாவில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகே ஷாலினி தாக்கூரை ரோஹித் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.
இந்தச் சம்பவத்தின்போது அங்கு வந்த போலீசாருடன் ரோஹித்துக்கு மோதல் ஏற்பட்டது. அப்போது அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்தச் சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், ரோஹித் இந்தியாவிலிருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் அமெரிக்காவில் குடியேறியவர் என்பது தெரியவந்துள்ளது. மேலும், அவர் நீண்ட நாட்களாக ஷாலினி தாக்கூரைப் பின்தொடர்ந்து வந்ததும், பின்னர் அவரைச் சுட்டுக்கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.














