
கீவ்: செப்.13-
உக்ரைன் மீது ரஷ்யா விடிய விடிய நடத்திய ட்ரோன் தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.உக்ரைன்–ரஷ்யா இடையே கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த நிலையில், ரஷ்யப் படைகள் உக்ரைனில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. குடியிருப்புப் பகுதிகள், துறைமுகங்கள், உணவு கிடங்குகள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மீது ரஷ்யப் படைகள் கண்மூடித்தனமான வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
நேற்று ஒரே நாளில் மட்டும் ரஷ்யா சுமார் 500க்கும் மேற்பட்ட ட்ரோன்களைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. விடிய விடிய நடைபெற்ற இந்தத் தாக்குதல்களில் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலின் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். பச்சிளம் குழந்தை உட்பட 37 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களில் பலர் தீவிர நிலையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனின் பொருளாதாரத்தை அடியோடு சிதைக்கவே ரஷ்ய அதிபர் புதினின் படைகள் பொதுமக்களின் கட்டமைப்புகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.இதுகுறித்து ஜெலன்ஸ்கி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: போர்க்களத்தில் வெற்றி பெற முடியாத ரஷ்யா, தனது போரை உக்ரைனின் பொருளாதாரத்தை நோக்கித் திருப்பியுள்ளது.மருந்தகங்கள், ரயில்கள், தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சேமிக்கப்படும் கிடங்குகளை அழித்து, எங்கள் மக்களின் மன உறுதியை உடைக்க ரஷ்யா முயற்சிக்கிறது. ரஷ்யாவின் இந்தப் பயங்கரவாதத் தாக்குதலுக்கு சர்வதேச நாடுகள் தகுந்த கண்டனமும் பதிலடியும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.














