
பெங்களூர், செப்.13-
போலீஸ் பணியாளர் வாரியத்தின் முன்அனுமதி பெறாமல் செய்யப்பட்ட போலீஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவுக்கு, பின்னர் வாரியம் ஒப்புதல் அளித்தால் அது நடைமுறை தவறு ஆகாது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறைந்தபட்ச பணிக்காலம் முடிவடைவதற்கு முன்பாகவே இடமாற்றம் செய்யப்பட்டது என்ற காரணத்திற்காக மட்டுமே அந்த உத்தரவு சட்டவிரோதமாகிவிடாது எனவும், தகுதியான அதிகார அமைப்பு ஒப்புதல் அளித்தால் அத்தகைய இடமாற்றம் செல்லும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
புலிகேசி நகர் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பி.கோவிந்தராஜு, கடந்த மே 10-ஆம் தேதி விதான் சவுதா பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதே உத்தரவில், பேடரஹள்ளி காவல் நிலைய ஆய்வாளராக சி.பாஸ்கர் நியமிக்கப்பட்டார். பாஸ்கர் மே 11 அன்று பொறுப்பேற்றார்.
ஆனால், மே 14 அன்று பிறப்பிக்கப்பட்ட மற்றொரு திருத்தப்பட்ட உத்தரவில், பாஸ்கர் பேடரஹள்ளியிலிருந்து லோக் ஆயுக்தாவிற்கு மாற்றப்பட்டு, கோவிந்தராஜு மீண்டும் பேடரஹள்ளி காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டார்.
இதனை எதிர்த்து பாஸ்கர் தொடர்ந்த வழக்கில், கர்நாடக நிர்வாக தீர்ப்பாயம் மே 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இடமாற்ற உத்தரவை ரத்து செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து கோவிந்தராஜு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
நீதிபதிகள் டி.கே.சிங் மற்றும் எச்.சாந்திபூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு, கர்நாடக நிர்வாக தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது. கர்நாடக போலீஸ் சட்டத்தின்படி, துணை காவல் கண்காணிப்பாளர் மற்றும் அதற்கு கீழ்நிலை அதிகாரிகளின் இடமாற்றம், பணிநியமனம் குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் போலீஸ் பணியாளர் வாரியத்திற்கு உண்டு. குறைந்தபட்சம் ஒரு வருடம் பணிக்காலம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட சிறப்பு சூழ்நிலைகளில் காலாவதிக்கு முன்பே இடமாற்றம் செய்ய சட்டத்தில் இடமுண்டு.
மே 14 அன்று செய்யப்பட்ட இடமாற்றத்திற்கு, ஜூன் 8 அன்று பணியாளர் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. முன்அனுமதி பெறாதது சரி செய்யக்கூடிய ஒரு சிறிய குறைபாடே தவிர, அதனால் இடமாற்ற உத்தரவு செல்லாததாகி விடாது. வாரியத்தின் இந்த நடவடிக்கை அதிகார வரம்பை மீறியது அல்ல என்பதால், தீர்ப்பாயம் பிறப்பித்த ரத்து உத்தரவு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.














