
புதுடெல்லி, செப்.15-
இந்தியாவில் மக்கள் தொகை, வீடுகள் எண்ணிக்கை ஆகிய தகவல்கள் அரசிடம் இருந்தால்தான் அதற்கேற்ற திட்டங்களை வகுக்க முடியும். எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு அனைத்து திட்டங்களுக்கும் அடிப்படையாகும். சுதந்திரத்துக்குப் பிறகு முதல் கணக்கெடுப்பு 1951-ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 1951-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை கணக்கெடுப்பு தொய்வின்றி நடந்தது. ஆகவே 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு நடந்திருக்கவேண்டும். ஆனால் உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியதால் அது நடத்தப்படாமல் தள்ளிப்போனது. இதனால் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வந்த கணக்கெடுப்பு வழக்கில் இடைவெளி ஏற்பட்டது. மக்கள் தொகையின் அடிப்படையில் அரசு மேற்கொள்ளும் திட்டமிடல், நிதி ஒதுக்கீடு, பயனாளிகள் தேர்வு ஆகிய பணிகளுக்கு புதிய தரவுகள் அவசியமாகியுள்ளன. மக்கள் தொகை கணக்கெடுப்பு இப்போது பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் தரவுகளின் அடிப்படையில் மானிய விலையில் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கல், 125 நாள் வேலைத்திட்டம், வறுமை ஒழிப்புத் திட்டப் பயனாளிகளை முடிவு செய்தல் ஆகியவற்றுக்கான வியூகங்களை வகுக்க முடியும். கல்வி, மருத்துவம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுக்கு அரசு நிதி ஒதுக்கவும் இயலும். பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் நிதி ஒதுக்கும் பணிகள் தற்போது துல்லியமாக நடைபெறாத சூழல் நிலவுகிறது. அதனால் மத்திய அரசு பணிகளை தொடங்கியுள்ளது. முதல் கட்டமாக வீட்டு பட்டியல், வீட்டு வசதிகள் கணக்கெடுப்புக்கான களப்பணி கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ந்தேதி தொடங்கியது. வீடுவீடாக களப்பணியாளர்கள் செல்லும்முன் ஜூலை 17-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை சுய கணக்கெடுப்பு இணையதளம் உருவாக்கப்பட்டது. அதில் வீட்டு கணக்கெடுப்புக்கான 33 கேள்விகளுக்கு ஏராளமானோர் தாங்களே பதிலளித்தனர். இதனால் களப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று நேரடியாக கேட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டிய தேவை இல்லாமல் போனது.













