Home மாவட்டங்கள் பெங்களூர் கர்நாடக அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடிவு

கர்நாடக அமைச்சருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய முடிவு

பெங்களூரு: செப். 16-
வெளிநாட்டில் சட்டவிரோதமாக பணம் முதலீடு செய்துள்ள குற்றச்சாட்டின் பின்னணியில், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜாரக்கிஹோளிக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் (பி.எம்.எல்.ஏ) கீழ் வழக்குப்பதிவு செய்வது தொடர்பாக அமலாக்கத்துறை (இ.டி) அதிகாரிகள் ஆயத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கு தொடர்பாக ஹவாலா மூலம் பெரும் தொகையிலான பணப் பரிவர்த்தனை நடந்துள்ள தகவல் கிடைத்துள்ள நிலையில், விசாரணையை துரித கதியில் கையில் எடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் சதீஷ் ஜாரக்கிஹோளி, அவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்புள்ள பல இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பெங்களூரு, பெலகாவி, கோகாக் மற்றும் கொல்கத்தாவில் நடந்த சோதனை நடவடிக்கையில் 3.3 கோடி ரொக்கம், சுமார் 15 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு நாணயம் மற்றும் ஆவணங்களைக் கைப்பற்றியிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு முதலீடுகள், எல்லை தாண்டிய வர்த்தகங்கள் மற்றும் நிதி முறைகேடுகள் குற்றச்சாட்டுகள் தொடர்பானவை.
அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீன், கர்நாடகா மற்றும் கோவா அதிகாரிகளுக்கு வழக்குகளின் விசாரணையை வேகப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இவ்வளவு தகவல்கள் கிடைத்திருந்தும் விசாரணையில் முன்னேற்றம் ஏன் ஏற்படவில்லை என்பது குறித்து அதிகாரிகளிடம் இருந்து தெளிவான தகவல்களைப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
13 முக்கிய வழக்குகள்:
கர்நாடகாவுக்குத் தொடர்புடைய முக்கிய வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தும் பொறுப்பு அமலாக்கத்துறை இயக்குநர் ராகுல் நவீனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அபெக்ஸ் வங்கி வழக்கில் கே.என். ராஜண்ணா, பெட்டிங் வழக்கில் கே.சி. வீரேந்திர பாப்பி, கோச்சிமுல் வழக்கில் கே.வை. நஞ்சேகவுடாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், வால்மீகி மேம்பாட்டுக் கழகத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு, முடா வழக்கு மற்றும் கே.பி.எஸ்.சி முறைகேடு உள்ளிட்ட 13 முக்கிய வழக்குகளின் விசாரணைக்கு வேகம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் சில ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணையில் உள்ளன, மேலும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் விசாரணைக் கட்டத்தில் உள்ளன. வால்மீகி மேம்பாட்டுக் கழக வழக்கு மற்றும் முடா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அமலாக்கத்துறை முன்பே விசாரணை நடத்தியுள்ளது.
ஒரு மாதத்தில் விசாரணை:
மாநிலத்தின் முக்கிய 13 வழக்குகளின் விசாரணையில் ஒரு மாதத்திற்குள் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்குகளின் தற்போதைய நிலை, நிலுவையில் உள்ள விசாரணை கட்டங்கள் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் பெறப்பட்டு வருகின்றன.