
பெங்களூரு: செப். 16-
பெங்களூரு பேட்டராயனபுரத்தைச் சேர்ந்த சாந்தம்மா (62) என்பவரிடம், சௌடேஸ்வரி பூஜை செய்வதாகக் கூறி ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளைச் சுருட்டிக்கொண்டு, விபத்து ஏற்பட்டது போல் ‘ஏஐ’ வீடியோ அனுப்பி ஏமாற்றிய போலி ஜோதிடரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
நடந்தது என்ன?
விக்டோரியா மருத்துவமனை நடைபாதையில் ஜோதிடம் பார்த்துவந்த வெங்கடேஷ் என்பவனுக்கும், சிகிச்சைக்காக அங்கு வந்துசென்ற மூதாட்டி சாந்தம்மாவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சாந்தம்மாவின் குடும்ப மற்றும் ஆரோக்கியப் பிரச்சினைகளைத் தெரிந்துகொண்ட அந்த போலி ஜோதிடர், அவரது வீட்டிற்கு வந்து சௌடேஸ்வரி பூஜை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதை நம்பி பூஜை செய்த பிறகு, மூதாட்டியின் உடல்நிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் மேலும் நம்பிக்கை அடைந்த சாந்தம்மா, தனது மகனின் குடிப்பழக்கம் மற்றும் மகளின் திருமணம் குறித்தும் ஜோதிடரிடம் கேட்டுள்ளார்.
நகைகள் அபகரிப்பு:
வீட்டில் இருக்கும் தங்க நகைகளுக்குப் பூஜை செய்தால் தோஷம் நீங்கும் என்று நம்பவைத்த வெங்கடேஷ், ஒவ்வொரு அமாவாசை மற்றும் பௌர்ணமியின் போதும் நகைகளை வாங்கிச் சென்றுள்ளான். இப்படி கடந்த ஒரு ஆண்டில் சிறுகச் சிறுக ரூ.40 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை அவன் கைபற்றியுள்ளான்.
ஏஐ வீடியோ நாடகம்!
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி வரமகாலட்சுமி பண்டிகை பூஜைக்காகத் தனது நகைகளைத் திருப்பித் தருமாறு சாந்தம்மா கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜோதிடன், தனக்குக் கொடூர விபத்து நடந்துவிட்டதாக வேறொரு நபர் மூலம் போன் செய்ய வைத்து நாடகமாடியுள்ளான்.
மேலும், தனது தலையில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது போல ‘ஏஐ’ தொழில்நுட்பம் மூலம் போலியான வீடியோ ஒன்றை உருவாக்கி சாந்தம்மாவுக்கு அனுப்பிவிட்டு, தனது மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்துள்ளான்.
சந்தேகமடைந்த சாந்தம்மா அந்த வீடியோவை தனது பிள்ளைகளிடம் காட்டியபோது, அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோ என்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, சாந்தம்மா அளித்த புகாரின் பேரில் பேட்டராயனபுர போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக உள்ள போலி ஜோதிடனைப் பிடிக்க வலைவீசியுள்ளனர்.













