
வாஷிங்டன்: செப்.16-
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வாங்கும் நாடுகள் மீது கடுமையான பொருளாதார நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்கா தீவிரமாக களமிறங்கியுள்ளது! ரஷ்யாவின் எரிபொருளை வாங்கும் நாடுகள் மீது அதிகபட்சமாக 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கும் அதிகாரத்தை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க மசோதா, அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இறுதி வாக்கெடுப்பு கட்டத்தை எட்டியுள்ளது!
கடந்த செப்டம்பர் 15 அன்று நடந்த முதற்கட்ட நடைமுறை வாக்கெடுப்பில், இந்த மசோதா 214 – 211 என்ற மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 16-ஆம் தேதியான இன்று பிரதிநிதிகள் சபையில் இதன் மீதான இறுதி வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
‘லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026’ என்று அழைக்கப்படும் இந்த மசோதாவுக்கு ஏற்கனவே அமெரிக்க செனட் சபையில் அசுர ஆதரவு கிடைத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வாக்கெடுப்பில் 86 – 11 என்ற கணக்கில் செனட் சபை இதற்கு ஒப்புதல் அளித்தது. ரஷ்யாவின் எரிபொருள் வருமானத்தை அடியோடு முடக்குவது, தடைகளை மீறி நடக்கும் வர்த்தகத்தை தடுப்பது மற்றும் ரஷ்யா-ஈரான் மீதான தடைகளை மேலும் தீவிரப்படுத்துவது ஆகியவை இந்த சட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்த மசோதா விவாதத்திற்கு வந்ததில் இருந்தே, உலக நாடுகளின் பார்வையெல்லாம் இந்தியா பக்கம் திரும்பியுள்ளது! டெமாக்ரடிக் கட்சி உறுப்பினர் ஸ்டெனி ஹோயர் கொண்டு வந்த திருத்தத்தில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு வாங்கும் நாடுகளின் பட்டியல் நேரடியாக சேர்க்கப்பட்டது. அந்தப் பட்டியலில் இந்தியா, சீனா, துருக்கி, அஜர்பைஜான், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, யு.ஏ.இ., சிங்கப்பூர், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகள் சேர்க்கப்பட்டு, அவற்றின் மீது 100% வரை வரி விதிக்க முன்மொழியப்பட்டது.
ஆனால், அமெரிக்கா உடனடியாக இந்தியா மீது 100% வரியை விதித்துவிடவில்லை! ஹோயர் கொண்டு வந்த அந்த குறிப்பிட்ட திருத்தத்தை ‘ஹவுஸ் ரூல்ஸ் கமிட்டி’ 3-7 என்ற கணக்கில் நிராகரித்து விட்டது. எனவே, இந்தியாவின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்ட அந்த திருத்தம் தற்போதைய சட்ட வரைவில் இடம் பெறவில்லை.
செனட் சபை அங்கீகரித்த அசல் மசோதாவிலேயே, ரஷ்யாவிடம் அதிக அளவில் எரிபொருள் வாங்கும் முக்கிய நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்க அதிபருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த மசோதா சட்டமானால், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அதிபர் டிரம்ப் தன் விருப்பப்படி 100% வரை வரி விதிக்க முடியும்! எனவே, “இந்தியாவிற்கு 100% வரி விதிக்கப்பட்டுவிட்டது” என்பது தவறான செய்தி. மாறாக, “வரி விதிக்கும் அதிகாரத்தை அதிபருக்கு வழங்கும் சட்டம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது” என்பதே நிஜம்.
பிரதிநிதிகள் சபையில் அதிபருக்கு இவ்வளவு பெரிய அதிகாரத்தை வழங்குவதற்கு பலத்த எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. பிரதிநிதி கிரிகோரி மீக்ஸ் உள்ளிட்ட சிலர், அதிபருக்கு வழங்கப்படும் இந்த வரம்பற்ற வரியதிகாரத்தை நீக்க வேண்டும் என திருத்தம் கொண்டு வந்தனர். ஆனால், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது. இந்த சட்டம் வெறும் எண்ணெயோடு நிற்கப்போவதில்லை! ரஷ்ய அரசியல் தலைவர்கள், எரிசக்தி துறை, வங்கி நிதி அமைப்புகள் மற்றும் தடைகளை மீறி செயல்படும் கப்பல்கள் என அனைத்தையும் முடக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.
2022-ல் உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்தது. நாட்டின் எரிபொருள் தேவை மற்றும் பொருளாதார பாதுகாப்பிற்காகவே இந்த முடிவை எடுத்ததாக இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. ஒருவேளை இந்த மசோதா முழுமையாக சட்டமாகி, இந்தியாவை குறிவைத்து 100% வரி விதிக்கப்பட்டால், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு செலவு பலமடங்கு அதிகரிக்கும்! குறிப்பக பொறியியல் பொருட்கள், மருந்துகள், ஜவுளித் துறை, ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்!
இன்றைய பிரதிநிதிகள் சபை வாக்கெடுப்பிற்கு பிறகே இந்த மசோதாவின் அடுத்தகட்ட நகர்வு தெரியவரும். சட்டம் நிறைவேறினாலும், அதிபர் டிரம்ப் இந்த அதிகாரத்தைப் பயன்படுத்துவாரா, எந்தெந்த நாடுகளுக்கு விதிவிலக்கு அளிப்பார் என்பதைப் பொறுத்தே இந்தியாவின் மீதான உண்மையான தாக்கம் தெரியும்!














