
வெலிங்டன், செப். 16- இந்தியாவுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மசோதாவை நியூசிலாந்து நாடாளுமன்றம் புதன்கிழமை நிறைவேற்றியது. இதன்படி, இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நியூசிலாந்தின் பொருள்களில் சுமார் 95 சதவீதத்துக்கான வரிகள் நீக்கப்படும் அல்லது கணிசமாகக் குறைக்கப்படும். இந்த வர்த்தக ஒப்பந்தம், நியூசிலாந்தின் பெரும்பாலான ஏற்றுமதிகளுக்கு வரிச்சலுகை அளிப்பதுடன், இந்தியப் பொருள்களுக்கு அந்த நாட்டில் வரியில்லா அணுகலையும் வழங்குகிறது. மசோதா 93-29 என்ற வாக்கு வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியும் ஆதரவு தெரிவித்தது. ஒப்பந்தத்தின் கீழ் இடம்பெறும் அனைத்து பொருள்களில் பாதிக்கும் மேற்பட்டவை, அது நடைமுறைக்கு வரும் நாளிலிருந்தே வரியில்லாமல் கிடைக்கும். “ஏற்றுமதியாளர்களுக்கு, இதன் நன்மைகள் உடனடியாகவும் கணிசமாகவும் கிடைக்கும்” என்று நியூசிலாந்து வர்த்தக அமைச்சர் டாட் மெக்லே அறிக்கையில் தெரிவித்தார்.
“இந்தத் தரமான ஒப்பந்தம் இந்த ஆண்டிலேயே நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்தப் பதவிக்காலத்தில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நிறைவேற்றுவோம் என்ற எங்கள் வாக்குறுதியை இது நிறைவேற்றும்” என்றும் அவர் கூறினார். ஒப்பந்தத்தின் கீழ், இந்தியாவின் அனைத்து பொருள்களுக்கும் நியூசிலாந்தில் வரியில்லா அணுகல் கிடைக்கும். மேலும், அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் 20 பில்லியன் நியூசிலாந்து டாலர் (சுமார் ரூ. 1 லட்சம் கோடி) முதலீடு செய்ய வெலிங்டன் ஒப்புக்கொண்டுள்ளது.














