
சென்னை: செப். 16-
முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தார். திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் அவர் தோல்வியைத் தழுவியிருந்தார்.
இந்த சூழலில் அவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அன்பில் மகேஸ் இல்லத்தில் தற்போது சோதனை நடக்கிறது.கிடைத்துள்ள தகவலின்படி திருச்சியில் உள்ள அன்பில் மகேஸ் இல்லத்திலும் சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பிலும் போலீசாரின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இரு இடங்களிலும் சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.













