
டெஹ்ரான், செப். 28-
ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும் என்று ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் அமெரிக்கா–ஈரான் இடையே போர் நீடித்து வருகிறது. தற்போது இரு நாடுகளும் தற்காலிகமாக தாக்குதல்களை நிறுத்தியுள்ளன. இந்தச் சூழலில், 7 நாட்கள் போர் நிறுத்தம் மேற்கொள்ளும் திட்டத்தை ஈரான் முன்தினம் முன்மொழிந்தது. அந்தத் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்தார். வரும் நவம்பரில் ஈரான் மீது மீண்டும் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து ஈரான் ராணுவ செய்தித் தொடர்பாளர் முகமது அக்ரமினியா நேற்று கூறியதாவது: மேற்கு ஆசியப் பிராந்தியத்தில் இக்கட்டான சூழல் நிலவுகிறது. மீண்டும் மிகப்பெரிய போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் தாக்குதல்களை எதிர்கொள்ள ஈரான் ராணுவம் முழு அளவில் தயாராக உள்ளது. ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்தினால் அமெரிக்காவுக்கு பேரழிவு ஏற்படும். இஸ்ரேலைப் பாதுகாப்பதே அமெரிக்காவின் பிரதான குறிக்கோள். இதற்காக வளைகுடா நாடுகளில் அமெரிக்க ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தளங்கள் முஸ்லிம் நாடுகளின் பாதுகாப்புக்கு ஒருபோதும் உத்தரவாதம் அளிக்காது. வளைகுடா பகுதியில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்களையும் மூட வேண்டும். அப்போதுதான் இப்பிராந்தியத்தில் நிரந்தர அமைதி திரும்பும். ஈரான் மீது இதுவரை 25,000-க்கும் மேற்பட்ட வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றை வெற்றிகரமாக முறியடித்துள்ளோம் என்று அவர் தெரிவித்தார். இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் ஆளில்லா நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் அமெரிக்க கடற்படை தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக ஈரான் கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.














