
சென்னை, அக். 1-
ஜெம் கிரானைட்ஸ் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து காவல் துணை ஆணையர் கீதாஞ்சலி விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக சென்னை கீழ்ப்பாக்கம் காவல் மாவட்ட துணை ஆணையர் கீதா நியமிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். 16 வயது சிறுமி தற்கொலை செய்துகொண்ட வழக்கில், 22 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெம் வீரமணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தற்போது, சிறுமியின் தற்கொலைக்குத் தூண்டியதாகவும் அவர் மீது கூடுதல் பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. இதனிடையே, கல்வி உதவி வழங்கியதாகக் கூறி சிறுமியை சொகுசு காரில் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறப்பு புலனாய்வுக் குழுவிடம் மற்றொரு புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகார் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த துணை ஆணையர் கீதாஞ்சலி, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கான உத்தரவை டிஜிபி பிறப்பித்துள்ளார். கீதாஞ்சலி தனது தனிப்பட்ட விருப்பத்தின் பேரிலேயே குழுவில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனினும், அது தொடர்பான தகவல் டிஜிபி உத்தரவில் தெரிவிக்கப்படவில்லை. கீதாஞ்சிக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ள துணை ஆணையர் கீதா, சிறப்பு புலனாய்வுக் குழுவினருடன் இணைந்து தனது பணியைத் தொடங்கியுள்ளார். இதற்கிடையே, சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜெம் வீரமணி, சாந்தி, மகேந்திர சிம்மன் ஆகியோரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.














