
சென்னை: அக். 1-
அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றி பயணம் செய்யும் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நாளை (அக்டோபர் 2) தொடங்கி வைக்கிறார். இதன்படி, மாநகர் மற்றும் நகர்ப்புறங்களில் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் பேருந்துகள், மாவட்டங்களுக்கு இடையேயான புறநகர் சாதாரணப் பேருந்துகள், 40 கிலோமீட்டருக்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகள் ஆகியவற்றில் மகளிர் இலவசமாகப் பயணம் செய்யலாம்.
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் தினமும் 20 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் நாள்தோறும் சுமார் 1.76 கோடி பேர் பயணம் செய்கின்றனர். பள்ளி மாணவர்கள், பெண்கள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் அரசுப் பேருந்துகளை நம்பிப் பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது 7 அரசு போக்குவரத்துக் கழகங்களில் சாதாரணப் பேருந்துகள் மற்றும் 40 கிலோமீட்டர் வரையிலான மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளில் மகளிர் கட்டணமின்றிப் பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தின் மூலம் கூடுதலாக 12,692 பேருந்துகள் திட்டத்தில் இணைக்கப்படுகின்றன. ஏற்கெனவே இயக்கப்படும் 18 ஆயிரம் பேருந்துகளில் சுமார் 12,600 பேருந்துகள் இத்திட்டத்தில் இடம்பெறுகின்றன. இது கிட்டத்தட்ட 69 சதவீதமாகும். இதன் மூலம் நாள்தோறும் சுமார் 84 லட்சம் மகளிர் பயன்பெறுவார்கள். தினசரி இயக்கப்படும் 1,94,000 நடைகளில், 1,65,312 நடைகள், அதாவது 85 சதவீதம், இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படுகின்றன. பாட்டி, அம்மா, அக்கா, தங்கை, பெண் குழந்தைகள் மற்றும் திருநர் உள்ளிட்டோருக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகளில் உள்ள மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களுடன் இணைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 25, 27-ம் தேதிகளில் சோதனை மற்றும் சரிபார்ப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. மாணவிகள் தொலைதூரக் கல்லூரிகளுக்கும், மகளிர் பணியிடங்கள், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றிப் பயணிக்க இத்திட்டம் உதவும் என அரசு வெளியிட்ட வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.













