
சென்னை, அக். 3- முன்னாள் மத்திய மந்திரி ப. சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியில் லட்சக்கணக்கான உண்மையான வாக்காளர்கள் விடுபட்டதை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 2026 செப்டம்பர் 29-ஆம் தேதி தேர்தல் ஆணையம் வெளியிட்ட கடிதம், உண்மையில் ஞானேஷ் குமார் அளித்துள்ள ஓர் ‘ஒப்புதல் வாக்குமூலம்’ போன்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் கடிதத்தில் பல முக்கியமான விஷயங்கள் ப்புக்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின்போது பல லட்சம் உண்மையான வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளனர். தற்போது விடுபட்ட அந்த வாக்காளர்களை மீண்டும் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், விதிகளுக்கு மாறாகப் படிவம் 6 சட்டவிரோதமாகத் திருத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். ‘இசிஐ நெட்’ மீதான கட்டுப்பாடு மையப்படுத்தப்பட்டதால், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளதாகவும் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியின் காரணமாகப் பல லட்சம் வாக்காளர்கள் ‘அவசரமாக’ நீக்கப்பட்டுள்ளனர். இனி எந்தவொரு எதிர்மறையான முடிவையும் அவசரமாக எடுக்கக்கூடாது என்று ஞானேஷ் குமார் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.













