Home செய்திகள் தேசிய செய்திகள் துர்கா சிலை வேன் விபத்தில் 7 பேர் பலி

துர்கா சிலை வேன் விபத்தில் 7 பேர் பலி

அமராவதி, அக். 3-
மராட்டியத்தில் தசரா பண்டிகையையொட்டி பிரதிஷ்டை செய்வதற்காக துர்கா சிலையை வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்குத் திரும்பியபோது ஏற்பட்ட சாலை விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 21 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தின் வார்தா பகுதியைச் சேர்ந்தவர்கள், தங்களது ஊரில் தசரா பண்டிகைக்காக துர்கா சிலையை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்திருந்தனர். இதற்காக சிலை வாங்குவதற்காக அவர்கள் டெம்போ வேனில் ஷேகான் பகுதிக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றனர். அங்கு துர்கா சிலையைப் பெற்றுக்கொண்டு, அதே வேனில் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பினர். அவர்கள் நேற்று அதிகாலை 12.45 மணியளவில் அமராவதி மாவட்டம் தமன்காவ் ரெயில் நிலையம் அருகே சம்ருத்தி விரைவுச்சாலையின் ‘சேனல் 97’ பகுதியில் வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்களது வேனுக்கு பின்னால் வேகமாக வந்த 16 சக்கரங்களைக் கொண்ட சரக்கு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. அந்த லாரி முன்னால் சென்று கொண்டிருந்த வேன் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 5 பேர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 23 பேர் பலத்த காயமடைந்தனர். தசரா பண்டிகைக்காக பிரதிஷ்டை செய்ய கொண்டு செல்லப்பட்ட துர்கா சிலையும் விபத்தில் உடைந்து சேதமடைந்தது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள், இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.