
சென்னை, அக். 3-
தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை குறைந்ததால், தக்காளி சாகுபடி பரப்பு குறைந்து, சென்னையில் அதன் விலை கிலோ ரூ.65 வரை உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 8.42 லட்சம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது. இதன் மூலம் 2.60 கோடி டன் உற்பத்தியாகிறது. தக்காளி உற்பத்தியில் மத்தியப் பிரதேசம் ஆண்டுக்கு 1.2 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி செய்து, 27 லட்சம் டன் உற்பத்தியுடன் முதலிடத்தில் உள்ளது. ஆந்திரம் 57 ஆயிரம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு, 23 லட்சம் டன் உற்பத்தியுடன் இரண்டாம் இடத்திலும், கர்நாடகம் 70 ஆயிரம் ஹெக்டேர் பரப்பு, லட்சம் டன் உற்பத்தியுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழகம் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் 16.23 லட்சம் டன் உற்பத்தியுடன் ஆறாம் இடத்தில் உள்ளது. இதனால் தமிழகத்தின் தக்காளித் தேவைக்கு பிற மாநிலங்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது.















