
குலசேகரன்பட்டினம், அக். 11- தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி, முன்னதாக சனிக்கிழமை காளி பூஜை நடைபெற்றது. இதற்காக அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம் நடத்தப்பட்டது. தொடர்ந்து காலையில் விநாயகர் பூஜை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. கடற்கரை சிதம்பரேஸ்வரர் கோவிலிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பின்னர் 108 சங்கு பூஜை, 108 கலச பூஜை ஆகியவை நடைபெற்றதைத் தொடர்ந்து முத்தாரம்மனுக்கு காளி பூஜை செய்யப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கொடிப்பட்டம் வீதி உலா நடைபெற்றது. கோவிலுக்கு கொடிப்பட்டம் வந்த பின்னர், காலை 5 மணியளவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து கொடிமர பீடத்துக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றன. தொடர்ந்து விரதமிருக்கும் பக்தர்களுக்கு காப்பு அணிவிக்கப்பட்டது.
இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். விழா நாட்களில் தினமும் இரவு 10 மணியளவில் அம்மன் பல்வேறு வாகனங்களில், வெவ்வேறு திருக்கோலங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் 10-ம் திருநாளான வருகிற 20-ந்தேதி இரவு 12 மணிக்கு சிகர நிகழ்ச்சியான மகிஷாசுர சம்ஹாரம் நடைபெறுகிறது.
















