Home பக்தி ஜோதி வடிவில் சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்

ஜோதி வடிவில் சூரிய பகவானுக்கு காட்சி அளித்த அண்ணாமலையார்

திருவண்ணாமலை, நவ. 26- திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீபம், நேற்று முன்தினம் மாலை கோவிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலை உச்சியில் ஏற்றப்பட்டது. மகா தீபத்தைக் காண வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து பல லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்தனர். அவர்கள் மலையைச் சுற்றி 14 கிலோமீட்டர் தூரம் நடந்து கிரிவலம் சென்றனர். மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்குக் காட்சி அளிக்கும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம், கடும் குளிர் மற்றும் பலத்த காற்றிலும் இன்று 3-வது நாளாகச் சுடர் விட்டு எரிந்து வருகிறது. சூரிய உதயத்தின்போது தீபமலை உச்சியில் இருந்து சூரிய பகவானுக்கு ஜோதி ஸ்வரூபமாக அண்ணாமலையார் காட்சி அளித்தார். இதனை பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கண்டு தரிசனம் செய்தனர்.மகா தீபக் காட்சி வருகிற 4-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து, மலை உச்சியில் இருந்து மகா தீபக் கொப்பரை இறக்கப்பட்டு, அதில் இருந்து எடுக்கப்படும் மை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.