
சென்னை: அக். 22-
வங்கக் கடலில் நாளை (அக்.23) உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறுகிறது. இதையொட்டி தமிழகத்தில் இன்று டெல்டா உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில், நாளை (23-ம் தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. இது வலுவடைந்து மேற்கு, தென் மேற்கு திசையில் நகரும். இப்போதுள்ள தரவுகளின்படி, தமிழகத்துக்கு இந்த புயலால் பாதிப்பு இல்லை.
தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக வலுப்பெற வாய்ப்பில்லை. இதன் காரணமாக தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும்.
திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும். மேலும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.
நாளை (23-ம் தேதி) கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும், மேலும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக் கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.













