
புதுடெல்லி: அக். 23-
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில் பங்கேற்று தீபம் ஏற்ற வேண்டும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். அதேபோல், இந்திய பைலட் ஸ்மித் மச்சாரையும் கவுரவிக்கும் வகையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு ஃபிளை துபாய் நிறுவனத்தின் விமானம் பயணிகளுடன் புறப்பட்டது. இந்திய பைலட் ஸ்மித் மச்சார், ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி ஆகியோர் விமானத்தை இயக்கினர்.
நடுவானில் பறந்த போது துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி பின்னால் இருந்து இந்திய பைலட் மச்சாரைத் திடீரென கோடாரியால் தாக்கினார். இதில் நிலைகுலைந்த அவர் தரையில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.
அவரது மண்டை ஓடு உடைந்தது. உயிர் போகும் தருவாயிலும் இந்திய பைலட் மச்சார், துணை பைலட் உடன் துணிச்சலாக போராடினார். மிகுந்த சிரமப்பட்டு மச்சார் அறைக் கதவைத் திறந்தார். அவரது சத்தம் கேட்டதும் பயணிகள் சிலர் விரைந்து சென்று துணை பைலட்டை மடக்கிப் பிடித்தனர்.
இதன் பின்னர் விமானத்தில் பயணம் செய்த பைலட்டுகள் சிலர் மேற்கொண்டு விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினர். இதற்கிடையில், ரத்த வெள்ளத்தில் கிடந்த இந்திய பைலட் மச்சாருக்கு விமானத்தில் பயணித்த பல் மருத்துவர் முதலுதவி சிகிச்சை அளித்து ரத்தப் போக்கை கட்டுப்படுத்தினார்.













