Home செய்திகள் தேசிய செய்திகள் காங்கிரஸ் ஒட்டுண்ணியாக மாறிவிட்டது: பிரதமர் மோடி

காங்கிரஸ் ஒட்டுண்ணியாக மாறிவிட்டது: பிரதமர் மோடி

புதுடெல்லி, அக். 23-
“அமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை கொண்டுவர விரும்பும் இயக்கங்கள் சில உள்ளன. ஜனநாயகத்தில் இத்தகைய இயக்கங்கள் அவசியமானவை. ஆனால், காங்கிரஸ் என்னும் ஒட்டுண்ணியால் அந்த இயக்கங்களின் குரல் காணாமல் போகிறது” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. தலைநகர் டெல்லியில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சிஜேபி உள்ளிட்ட அமைப்புகளும் இதில் பங்கேற்றன. இந்தச் சூழலில், தனியார் செய்தி நிறுவன மாநாட்டில் பிரதமர் மோடி பேசியது கவனம் பெற்றுள்ளது. அப்போது அவர் கூறியதாவது: “காங்கிரஸ் கட்சி ஒட்டுண்ணியாக மாறிவிட்டது. அடுத்தவர்கள் முன்னேறுவதை அது விரும்புவதில்லை. சுயமாகச் சிந்திக்கும் திறனை காங்கிரஸ் இழந்துள்ளது. ‘திமாகி நக்சல்கள்’ அதன் சிந்தனையை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். எதிர்க்கட்சி தரப்பில் திறமையான இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் உள்ளனர். அவர்கள் கருத்துகளை முன்வைக்கவும், அரசாங்கத்தை விமர்சிக்கவும் விரும்புவதை நாடாளுமன்றத்தில் பார்த்திருக்கிறோம். ஆனால், காங்கிரஸ் நாடாளுமன்றத்தையே செயல்பட விடுவதில்லை. மற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கக் கூடாது என்பதற்காகவும், ஒரே ஒரு நபரை முன்னிலைப்படுத்துவதற்காகவும் அந்தக் கட்சி இவ்வாறு செயல்படுகிறது. அந்த நபர் வெளிநாடுகளுக்குச் சென்று தேசத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார். இந்தியாவின் தேசிய விவகாரங்களில் வெளிநாடுகள் தலையிட வேண்டும் என்றும் முறையிடுகிறார். அவரை முன்னிலைப்படுத்த காங்கிரஸ் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளன. காங்கிரஸ் கட்சி தனது அழிவைத் தானே தேடிக்கொள்ளட்டும். ஆனால், தங்கள் குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியாவின் சாதனைகளையும் முன்னேற்றத்தையும் அந்தக் கட்சி கேள்விக்குள்ளாக்குகிறது. உண்மையில், அந்தக் குடும்பம் காங்கிரஸ் கட்சிக்கு சுமையாக மாறியுள்ளது. இதை அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் நன்றாக அறிந்தும் மவுனமாக உள்ளனர்” என்றார்.