Home செய்திகள் தேசிய செய்திகள் சட்டவிரோத பட்டாசு உற்பத்தியில் வெடிவிபத்து: 5 பேர் பலி

சட்டவிரோத பட்டாசு உற்பத்தியில் வெடிவிபத்து: 5 பேர் பலி

பாட்னா, அக். 25-
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்த வீட்டில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் பட்டாசு விற்பனையாளர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 2 தொழிலாளர்கள் அடங்குவர். மேலும் 3 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவான் மாவட்ட கிராமம் ஒன்றில் 2 அடுக்குமாடிகளைக் கொண்ட ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு உற்பத்தி நடைபெற்று வந்தது. அந்த வீட்டில் ஏராளமான பட்டாசுகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், வீட்டில் திடீரென சக்திவாய்ந்த வெடிவிபத்து ஏற்பட்டது. வெடிவிபத்தின் காரணமாக வீட்டில் இருந்தவர்கள் சிக்கிக்கொண்டனர்.
இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 2 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர்கள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து, விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் மேலும் 3 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்கள் அம்ருதின் அஹமது (70), முஸ்கல் சித்திக் (20), குஷ்பு சித்திக் (10), அர்ஷத் சித்திக் (10), ராஜ்குமார் (35) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் ராஜ்குமார் பட்டாசு விற்பனையாளராக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது குடும்ப உறுப்பினர்களும், பட்டாசு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த 2 தொழிலாளர்களும் உயிரிழந்தவர்களில் அடங்குவர். இதற்கிடையில், வெடிவிபத்தில் காயமடைந்தவர்கள் யாரும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. வீட்டில் தயாரிக்கப்பட்டு வந்த வெடிபொருட்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பட்டாசு உற்பத்தி தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.