Home செய்திகள் தேசிய செய்திகள் தெலுங்கானாவில் சிறுமி கடத்தல்; 7 பேர் கைது

தெலுங்கானாவில் சிறுமி கடத்தல்; 7 பேர் கைது

ஐதராபாத், அக். 25-
தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட்டை மாவட்டத்தில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். சித்திப்பேட்டை மாவட்டம் தூள்பேட்டை மண்டலத்துக்கு உள்பட்ட பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. சிறுமியின் பெற்றோர் விவசாயப் பணிக்காக வெளியே சென்றிருந்ததால், அவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் சிறுமியை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் சிறுமியை அருகிலுள்ள கிராமத்துக்கு அழைத்துச் சென்ற அந்தக் கும்பல், அங்கு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இரவு முழுவதும் சிறுமிக்கு கொடுமை செய்ததாக கூறப்படும் அவர்கள், மறுநாள் காலை அவரை சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்து அங்கு இறக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
வீட்டுக்கு திரும்பிய சிறுமி, தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் தொடர்ச்சியாக, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் 3 சிறுவர்கள் உள்பட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 சிறுவர்களும் அரசால் நடத்தப்படும் சிறுவர்களுக்கான சீர்திருத்த மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் தெலுங்கானாவின் செரியல் நகர் மற்றும் தூள்பேட்டை கிராமப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.