
மணிலா, அக். 25-
பிலிப்பைன்ஸில் விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்ட விபத்தில், நான்கு விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என பிலிப்பைன்ஸ் விமானப்படை தெரிவித்துள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவின் தெற்குப் பகுதியில் உள்ள பெர்னாண்டோ விமானப்படைத் தளத்தில் நேற்றுமுன்தினம் இந்த விபத்து நிகழ்ந்தது. பயிற்சியில் ஈடுபட்டிருந்த ‘எஸ்எப்-260’ ரகத்தைச் சேர்ந்த இரண்டு ராணுவ விமானங்கள் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதியதைத் தொடர்ந்து, அவை விபத்துக்குள்ளாகின.இதுகுறித்து பிலிப்பைன்ஸ் விமானப்படை செய்தித் தொடர்பாளர் கர்னல் ஆல்வின் கபிங்குயான் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “பிலிப்பைன்ஸில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இரண்டு ‘எஸ்எப்-260’ ரக ராணுவ விமானங்கள் நடுவானில் மோதிக் கொண்டதில், நான்கு விமானிகள் உயிரிழந்தனர். இந்த விபத்தில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விமானப்படையிடம் உள்ள ‘எஸ்எப்-260’ ரக விமானங்களின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு விமானங்களிலும் இருந்த விமானிகளின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் அடையாளங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்படவில்லை. விபத்து நிகழ்ந்த விமானப்படைத் தளம், மணிலாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.













