
வாஷிங்டன், அக். 25-
ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் ராணுவம் பயன்படுத்தி வந்த ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை கடந்த வாரம் முடக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உக்ரைன் ராணுவத்தால் தாக்குதல்களைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. சேவை முடக்கப்பட்டதற்கான காரணம் குறித்து குழப்பம் நிலவிய நிலையில், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் விளக்கம் அளித்துள்ளார். உக்ரைன் ராணுவம், ரஷ்யாவுக்கு எதிரான தாக்குதல்களுக்காக ஸ்டார்லிங்க் சேவையைப் பயன்படுத்தி விதிமுறைகளை மீறியதாக மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, ஆளில்லா ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த இந்தச் சேவை பயன்படுத்தப்பட்டதாகவும், அதைத் தடுக்கவே கடந்த வாரம் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள மஸ்க், “ஸ்டார்லிங்க் என்பது பொதுமக்களுக்கான வணிக ரீதியிலான செயற்கைக்கோள் இணைய சேவை. மனிதர்களைக் கொல்வதை நோக்கமாகக் கொண்ட தாக்குதல்களுக்கு இதைப் பயன்படுத்துவது ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், உக்ரைன் ராணுவம் இதைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தும் ட்ரோன்களை இயக்கியுள்ளது. இதன் மூலம் சேவை விதிமுறைகளை மீறியுள்ளது. இதைத் தடுக்கவே நடவடிக்கை எடுக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.














