Home செய்திகள் உலக செய்திகள் பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: பாரிஸில் லட்சம் பேர்

பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: பாரிஸில் லட்சம் பேர்

பாரிஸ், அக். 25-
பிரான்ஸ் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமையன்று பாரிஸில் சுமார் ஒரு லட்சம் பேர் திரண்டு பேரணியாகச் சென்றனர். கூட்டத்தைக் கலைக்க காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளையும் தண்ணீரைப் பீய்ச்சும் வாகனங்களையும் பயன்படுத்தினர். கடந்த வார இறுதியில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கும் வகையில்,
நாடு முழுவதும் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் என 70,000 பேர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதுடன், ரோந்துப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கவச வாகனங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாரிஸில் உள்ள முக்கிய அருங்காட்சியகங்கள், கலாச்சார மையங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டன. லூவ்ரே, ஆர்சே, பிக்காசோ அருங்காட்சியகம், கிராண்ட் பலாஸ் உள்ளிட்ட முக்கிய மையங்கள் சனிக்கிழமையன்று மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. நகரின் முக்கியப் பகுதிகளில் உள்ள 20-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்களும் மூடப்பட்டு, போக்குவரத்து நெறிப்படுத்தப்பட்டது.
வணிக நிறுவனங்களைப் பாதுகாக்க கடை உரிமையாளர்கள் ஜன்னல்களில் மரப்பலகைகளை அமைத்ததுடன், கூடுதல் காவலாளிகளையும் பணியமர்த்தினர். லூயிஸ் உய்ட்டன், டியோர், பல்காரி உள்ளிட்ட முன்னணி பிராண்டுகளின் கடைகள் அமைந்துள்ள வாண்டோம் சதுக்கப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் அதிகரிக்கப்பட்டது.நாடு முழுவதும் 70,000 பாதுகாப்புப் பணியாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனேஸ் தெரிவித்துள்ளார். பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினர், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள் மூலம் முக்கியப் பகுதிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கடந்த வாரப் போராட்டங்களின்போது நடந்த வன்முறை, கடைகள் சூறையாடப்பட்ட சம்பவங்கள் குறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு எச்சரித்துள்ளது. பாரிஸ் மட்டுமின்றி லியான் உள்ளிட்ட நகரங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன. தடை செய்யப்பட்ட பகுதிகளில் கூடிக் கலவரத்தில் ஈடுபட முயன்றவர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தினர். பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்புக்கு எதிராக கடந்த மாதம் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் தொடங்கிய போராட்டம், தற்போது வாழ்க்கைச் செலவு உயர்வு, ஊதிய உயர்வு, பொதுச் சேவைகள், பொருளாதார சமத்துவமின்மை ஆகியவற்றுக்கு எதிரான தேசியப் போராட்டமாக மாறியுள்ளது.