
குன்னூர் / கோவை, அக். 25- கனமழை காரணமாக ஊட்டி மலைப்பாதையில், மண் சரிவில் அரசு பேருந்து சிக்கி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார். காயங்களுடன் நடத்துநர் மீட்கப்பட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊட்டி, கொடைக்கானலில் சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததைத் தொடர்ந்து, கோவை, நீலகிரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் குன்னூர், கோத்தகிரி, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருந்ததால், மலைப்பாதைகளில் இரவு நேரப்பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியிருந்தது.
இதற்கிடையே ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு அரசுப் பேருந்து புறப்பட்டது. பாலடாவைச் சேர்ந்த ஓட்டுநர் ஜனகராஜ் (50) பேருந்தை ஓட்டினார். கோத்தகிரியைச் சேர்ந்த நடத்துநர் கேசவன் மற்றும் 6 பயணிகள் பேருந்தில் இருந்தனர்.
பர்லியாறு சோதனைச் சாவடியைக் கடந்தபோது, திடீரென மண் சரிவு ஏற்பட்டு மரம் ஒன்று பேருந்தின் முன்பகுதியில் விழுந்தது. இதையடுத்து ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். பயணிகள் உடனடியாக இறங்கினர். ஆனால், ஓட்டுநரும் நடத்துநரும் இறங்குவதற்குள் மீண்டும் பெரிய அளவில் மண் சரிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில் பேருந்து நொறுங்கியதால் இருவரும் உள்ளே சிக்கிக்கொண்டனர்.














