Home மாவட்டங்கள் பெங்களூர் யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது

யானை தந்தம் விற்க முயன்ற 2 பேர் கைது

மைசூரு, அக். 25:

சட்டவிரோதமாக யானை தந்தத்தை விற்க முயன்ற 2 பேரை வனச் ரோந்துப் படை அதிகாரிகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.

ஹுணசூரு தாலுகா பல்லேனஹள்ளியைச் சேர்ந்த ரவிச்சந்திரா (வயது 35) மற்றும் க்யாதனமாரனஹள்ளியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 33) ஆகியோரே கைது செய்யப்பட்ட குற்றவாளிகளாவர்.

ராஜேஷ் என்பவர் தனது பையில் யானை தந்தத்தை வைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் (பஜாஜ் பல்சர்) மைசூரு தாலுகா சிக்கஹள்ளி கிராம எல்லைக்குட்பட்ட ஸ்ரீராம லே-அவுட் மொசம்பாயனஹள்ளி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிடைத்த ரகசிய தகவலின் பேரில் வனச் ரோந்துப் படை ஊழியர்கள் அவரைச் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த யானை தந்தத்தை விற்கக் கொண்டு சென்றதாக ராஜேஷ் ஒப்புக்கொண்டார். மேலும் இந்த சட்டவிரோத வியாபாரத்திற்கு 2 பேர் உதவியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த தகவலின் அடிப்படையில் வனத்துறை அதிகாரிகள் ஹுணசூரு நகரில் இருந்த ரவிச்சந்திராவை அதிரடியாக கைது செய்தனர். இதில் தொடர்புடைய எச்.டி.கோட்டையைச் சேர்ந்த மற்றொரு குற்றவாளி தலைமறைவாகி உள்ளதால், அவரை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

எச்.டி.கோட்டை தாலுகா அந்தரசந்தே வனப்பகுதியில் இந்த யானை தந்தம் கிடைத்ததாக கைதானவர்கள் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சாமராஜநகர் வன வட்ட தலைமை வனப்பாதுகாவலர் டாக்டர் எம்.மாலதிப்பிரியா மற்றும் மைசூரு வனச் ரோந்துப் படை துணை வனப்பாதுகாவலர் ஜி.ஒய்.ராஜு ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அதிரடி வேட்டை நடத்தப்பட்டது.

தந்தங்கள் களவு:

சமீபத்தில் மத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிகல்லு குன்றில் காட்டுயானை ஒன்று இறந்து கிடந்தது. ஆனால், அந்த யானையின் 2 தந்தங்களும் மாயமாகி இருந்தது வனத்துறையினருக்கு தெரியவந்தது. இதையடுத்து மத்தூர் பகுதியில் புலிகள் மற்றும் யானைகள் இறப்பு தொடர்பாக விசாரணை நடத்த தனிப்படை அமைக்கப்பட்டது.

வேட்டைக்காரர்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக இந்தத் தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து தேசிய புலிகள் காப்பக ஆணையத்திற்கும்  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பண்டிப்பூர் வனத்துறை அதிகாரி  எல்.நந்தீஷ் தெரிவித்துள்ளார்.