Home மாவட்டங்கள் சென்னை பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்படவில்லை: ஆவின்

பால் பொருட்கள் உற்பத்தி நிறுத்தப்படவில்லை: ஆவின்

சென்னை, அக். 26-
ஆவினில் 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவல் உண்மைக்கு புறம்பானது என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் மூலம் தினசரி 34 லட்சம் லிட்டருக்கும் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்தப் பால் பதப்படுத்தப்பட்டு, பல்வேறு வகைகளில் பிரித்து விற்பனை செய்யப்படுகிறது.இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட பால் உப பொருட்கள் மற்றும் பிற பால் பொருட்கள் என மொத்தம் 225 வகையான பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இவை ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. சென்னையில் தினசரி ரூ.1.50 கோடி மதிப்பிலான பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையாகின்றன. இந்த நிலையில், ஆவினில் 100-க்கும் மேற்பட்ட பால் பொருட்களின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனை மறுத்து ஆவின் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆவின் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் எந்தவொரு பொருளின் உற்பத்தியும் முழுமையாக நிறுத்தப்படவில்லை. நெய், வெண்ணெய், பனீர், குக்கீஸ் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களும் வழக்கம்போல தயாரிக்கப்பட்டு, விற்பனை நிலையங்களுக்கும் சில்லறை விற்பனை முகவர்களுக்கும் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, பல்வேறு வகையான சிறப்பு இனிப்புகள் தயாரிக்கப்பட்டு, நிறுவனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், விற்பனை முகவர்களிடமிருந்து பெறப்படும் தேவைக் கணிப்புப் பட்டியல்களின் அடிப்படையில், அவர்களுக்குத் தேவையான பால் பொருட்களைத் தடையின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.