Home செய்திகள் தேசிய செய்திகள் பிரதமரின் தந்தை குறித்து கார்கே பேச்சு கண்டித்து பிஜேபி நாடு தழுவிய போராட்டம்

பிரதமரின் தந்தை குறித்து கார்கே பேச்சு கண்டித்து பிஜேபி நாடு தழுவிய போராட்டம்

புதுடெல்லி, அக். 26-
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தந்தை குறித்து காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசிய தரம் தாழ்ந்த பேச்சு, தேசிய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. இதனைக் கண்டித்து நாடு முழுவதும் இன்று(அக்.,26) பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என பா.ஜ., அறிவித்துள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த காங்கிரஸ் கட்சி பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசினார். அப்போது, மோடி அரசை வெளியேற்றுவோம், என்று கார்கே பேச, கூட்டத்தில் இருந்த ஒருவர், ‘மோடி எங்கேயும் போக மாட்டார், ஆட்சியை விட்டு இறங்க மாட்டார்’ என்று கூறினார்.
​இதனால் நிதானமிழந்து கார்கே, மேடையிலேயே, ‘மோடியை மட்டுமல்ல, அவருடைய அப்பாவாக இருந்தாலும் அனுப்புவோம்’என்று தரக்குறைவான வார்த்தைகளால் ஆவேசமாக பதிலளித்தார். ​கார்கேவின் இந்தப் பேச்சால் அரங்கில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. குரலெழுப்பிய அந்த நபரை காங்கிரஸ் தொண்டர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற்றினர்.
கார்கேவின் இந்தப் பேச்சு அரசியல் நாகரிகத்தின் எல்லைகளைத் தகர்த்துவிட்டதாக பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
​இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தித்து வரும் அடுத்தடுத்த தேர்தல் தோல்விகளால், காங்கிரஸ் கட்சி விரக்தியின் விளிம்புக்கே சென்றுவிட்டது. கொள்கையும் இல்லை, விவாதிக்க விஷயமும் இல்லை. அதனால்தான் ராகுலின் தலைமையில் காங்., தலைவர்கள் தனிநபர் தாக்குதலிலும், தரக்குறைவான வசவு அரசியலிலும் இறங்கியுள்ளனர். நாட்டின் பிரதமரின் மறைந்த தந்தை குறித்து பேசியிருப்பது ஜனநாயக மரபுகளைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல். காங்கிரஸ் கட்சியிடம் பண்பாடும் நாகரிகமும் துளியும் இல்லை என்பதை இது மீண்டும் காட்டுகிறது. இவ்வாறு அவர் காட்டமாகச் சாடினார்.

​நாடு தழுவிய போராட்டம்: பிரதமர் மோடியின் தந்தை குறித்து அநாகரிகமாகப் பேசிய கார்கே பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என வலியுறுத்தி, நாடு தழுவிய அளவில் இன்று பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என, பா.ஜ., அறிவித்துள்ளது. இந்த விவகாரம் இருகட்சியினர் இடையே கடும் வார்த்தைப் போரையும் உருவாக்கியுள்ளது.