Home செய்திகள் தேசிய செய்திகள் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் விபத்து

ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் விபத்து

லக்னோ: அக். 26- உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பயணித்த கான்வாயில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் பலர் காயமடைந்தனர். எனினும், ராகுல் காந்தி பாதுகாப்பாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில், 91-வது கிலோமீட்டர் அருகே இந்த விபத்து நிகழ்ந்தது. அங்கு 5 வாகனங்களும் ஓர் ஆம்புலன்ஸும் ஒன்றுடன் ஒன்று அடுத்தடுத்து மோதியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தொண்டர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உள்ளிட்ட பலர் காயமடைந்தனர். விபத்து தொடர்பான காணொலிகளும் வெளியாகியுள்ளன. சுல்தான்பூரில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைக்காக ராகுல் காந்தி சென்றபோது இந்தச் சம்பவம் நடந்தது. இதற்காக அவர் இன்று காலை லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களும் உள்ளூர் கட்சி நிர்வாகிகளும் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர். அங்கிருந்து சுல்தான்பூருக்குப் புறப்பட்டுச் சென்றபோது கான்வாயில் வாகனங்கள் மோதிக்கொண்டன. 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு பெங்களூருவில் நடைபெற்ற கூட்டத்தில், அப்போதைய பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷா குறித்து ராகுல் காந்தி தெரிவித்த கருத்துகள் தொடர்பான அவதூறு வழக்கின் விசாரணைக்காக அவர் உத்தரப் பிரதேசம் சென்றுள்ளார். சுல்தான்பூர் உள்ளூர் பா.ஜ.க. தலைவர் விஜய் மிஸ்ரா, 2018 ஆகஸ்ட் 4-ம் தேதி ராகுல் காந்திக்கு எதிராக அவதூறு புகார் அளித்தார். இந்த வழக்கில் 2023-ம் ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி, ஜாமீன் பெற்றார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி, சுல்தான்பூர் நீதிமன்ற வளாகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.